லி ஷாங்பு
லி ஷாங்பு

அடுத்தடுத்து மாயமாகும் சீன அமைச்சர்கள்: கேள்வி எழுப்பும் சர்வதேச நாடுகள்!

Published on

சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்பு, வாரக்கணக்கில் வெளியில் தலைகாட்டாமல் இருந்துவரும் நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவருடைய நிலைமை என்ன என்பது பற்றி பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட லி ஷாங்பு, அதற்கு முன்னர் ராக்கெட் படைக்குத் தலைமை தாங்கிவந்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவராகக் கருதப்படும் அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்பு, ஆகஸ்ட் 29ஆம் தேதி பீஜிங்கில் ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். அதன்பிறகு, கடந்த மூன்று வாரங்களாக அவர் பொது நிகழ்வு எதிலும் தட்டுப்படவே இல்லை.

செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் வியட்நாமில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையிலேயே, அமைச்சர் ஷாங்பு காணாமல் போனது தொடர்பாக சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

’அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?’ என்று ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அரசுத் தரப்போ, லி ஷாங்பு விசாரணை வளையத்தில் இருப்பதாகவும், ஆயுதக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விவகாரம் குறித்து சீன அரசு எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லி ஷாங்புவின் பெயர் இன்னும் உள்ளது.

ஷாங்புவைப் போலவே, கடந்த ஜூலை மாதம் வாரக்கணக்கில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங் காணாமல்போனதும், அதன்பிறகு அவர் திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டதும் நிகழ்ந்தது.

தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் காணாமல் போயிருப்பதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com