கிரீம்களில் பாதரசம் கூடாது- உலக சுகாதார அமைப்பு
கிரீம்களில் பாதரசம் கூடாது- உலக சுகாதார அமைப்பு

வெள்ளை ஆக்கும் கிரீம்களால் என்ன அபாயம்?

கருப்பாக இருப்பவர்கள் தோலின் நிறத்தை சற்று வெளுப்பாகக் காட்டிக்கொள்ள விரும்புவது பரவலாக இருக்கும் ஒரு பழக்கம். இதற்காக பெரும்பாலானவர்கள் வேதிப் பொருட்கள் அடங்கிய விதவிதமான பூச்சு கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர். 

இப்படி கருப்பை வெள்ளையாக்குவதாக கிரீம்களை விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்றம்வரை பிரச்னைகள் போயிருக்கின்றன. இந்த நிலையில், இந்தப் பூச்சுகளில் கலந்துள்ள வேதிப்பொருட்களால் குறிப்பாக பாதரசத்தால் புற்றுநோய்வரை ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

இலங்கையில் இந்த வெள்ளையாக்கும் கிரீம்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார நிறுவனமும் அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் இணைந்து ஒரு கூட்டு வேலைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில்தான், புற்றுநோய் பாதிப்பைவிட இந்த கிரீம் பாதரசத்தால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

பெரும்பாலானவர்கள் உடம்பு முழுவதும் இதைப் பூசிக்கொள்வதால், அதிலுள்ள பாதரசமும் அனைத்து உறுப்புகளுக்கும் பரவுகிறது என்றும் தொடர் விளைவாக சிறுநீரக பாதிப்பு உட்பட பல பிரச்னைகளை உண்டாக்குகிறது என்றும் இலங்கை தேசிய மருத்துவமனை சிறப்பு நிபுணர் மருத்துவர் இந்திரா ககவிட்டே தெரிவித்தார். 

தன்னுடைய 24 மணி நேர ஆய்வு ஒன்றில், 40 மருத்துவமனைகளில் 60 நோயாளிகளை சோதித்துப் பார்த்ததாகவும் அவர்களில் 10 சதவீதம் பேர் இந்த கீரீம் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் இதனால் நீண்ட காலம் கழித்துதான் பிரச்னை வரும்; அப்போது பார்த்துக்கொள்ளலாம் என பொதுவாக இருந்துகொள்கிறார்கள் என்றும் ஆனால், உடனடியாக உள்ளங்கைகள் கறுத்துப்போவதும் நகங்கள் வெளுப்பாகவும் மஞ்சளாகவும் மரநிறத்துக்கும் மாறிவிடுகின்றன என்றும் தோல் சிகிச்சை மருத்துவர் இந்திரா ககவிட்டே கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com