எலிசபெத் டெக்கன்ப்ராக், ஆண்ட்ரூ கார்மியர்
எலிசபெத் டெக்கன்ப்ராக், ஆண்ட்ரூ கார்மியர்

டிக்டாக்கில் குடும்பச் சண்டை! லட்சக்கணக்கில் பார்வையாளர்கள்...

“கணவனைப் பிரிந்து வாழும் ஒரு தாய். தன்னுடைய பிறந்தநாளை தானே கொண்டாடுவதற்கு கேக் செய்வது எவ்வளவு பெரிய துயரம்? என் குழந்தைகள் கொண்டாடவேண்டுமே என செய்துகொண்டு இருக்கிறேன்” என கண்ணீரும் கம்பலையுமாக பெண் ஒருவர் பேசும் டிக் டாக் வீடியோவை பல லட்சம் பேர் பார்த்ததோடு, அந்தப் பெண்ணுக்கு ஆறுதலும் வழங்கியுள்ளனர்.

அந்த வீடியோவை உருக்கமாகப் பேசி வெளியிட்ட எலிசபெத் டெக்கன்ப்ராக் அமெரிக்காவில் புளோரிடாவைச் சேர்ந்தவர். தன்னுடைய பிறந்தநாளுக்காக அவர் இந்த வீடியோவை வெளியிட, அதை அவரின் முன்னாள் கணவர் ஆண்ட்ரூ கார்மியர் பார்த்துள்ளார். உடனே, அவர் டெக்கன்ப்ராக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது அதிச்சி தந்தது.

“அவர் சொல்வது பொய். குழந்தைகள் என்னிடம் தான் உள்ளனர். எங்கள் இருவரின் ஒப்பந்தப்படி நான் தான் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு தரவேண்டிய 21, 175 டாலர் பணத்தையும் டெக்கன்ப்ராக் தரவில்லை. சுமார் ஒரு லட்சம் டாலர்களை திருடியுள்ளதோடு, தனக்கு கேன்சர் இருப்பதாகவும் பொய் சொல்லியுள்ளார். அவரிடம் குழந்தைகள் இல்லை.”என குற்றம்சாட்டி அவர் வீடியோ போட்டார்.

இதற்குக் கண்ணீருடன் பதில் வீடியோ வெளியிட்ட டெக்கன்ப்ராக், குழந்தைகள் தன்னுடன் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். “ஆண்ட்ரூ மிகவும் தவறானவர். என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் என்னை பிரச்னையிலிருந்து வெளியே வரச்சொன்னார்கள். ஆண்ட்ரூ என்ன செய்தாலும் அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை. குழந்தைகளுக்காகத்தான் நான் கவலைப்படுகிறேன். குழந்தைகள் என்னிடம் இல்லை என்றாலும், குழந்தைகளைச் சென்று பார்த்துவருகிறேன்.” என்று கூறும் டெக்கன்ப்ராக், தன்னுடைய வாழ்க்கையை அழிப்பதற்காகவே ஆண்ட்ரூ டிக்டாக் கணக்கைத் தொடங்கினார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

டெக்கன்ப்ராக் தற்போது தனது டிக்டாக் செயலியை டெலிட் செய்துள்ள நிலையில், ஆண்ட்ரூ மற்றொரு வீடியோவை வெளியிட்டு, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இவர்கள் இருவரின் சண்டையும் வேடிக்கை பார்த்த பார்வையாளர்கள், யார் பேசுவது உண்மையென தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். குடும்பச் சண்டைகள் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்குவதும் அதை பலர் பார்ப்பதும் நல்லது அல்லவே...

சில துளி கண்ணீருடன் யார் பேசினாலும் இந்த சமூகம் நம்பிவிடும். எனவே காணொலிகளை நம்பி லைக் பட்டனை அமுக்குவதற்கு முன் கொஞ்சம் யோசிப்போம். கண்ணால் காண்பதும் பொய்!

logo
Andhimazhai
www.andhimazhai.com