நேபாளத்தில் பேரழிவை உருவாக்கிய வெள்ளப் பெருக்கிற்கான காரணம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன.
புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகிய இரண்டும்தான் இந்தப் பேரழிவிற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது.
மலைப்பகுதிகளில் உள்ள பனிப் பகுதிகள் உருகி வருவதால், இவை பனியாறுகளாக மாறி தண்ணீர் கீழ்நோக்கி வருகின்றன.
நேற்று காலை 8.37 மணியளவில், நேபாள-சீன எல்லைப் பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில், சீனாவிலிருந்து ஒரு மலைப்பகுதியை உடைத்துக்கொண்டு நேபாளத்தை நோக்கி நிலச்சரிவைப் போல பனிச்சரிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சக்திவாய்ந்த சரிவினால் ஏற்பட்ட அதிர்வு, நிலநடுக்கத்திற்கு இணையாக 5.2 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளது.
எனவே, நிலநடுக்கத்தினால் பனிச்சரிவு ஏற்படவில்லை என்றும் பனிச்சரிவினால்தான் நிலநடுக்கத்திற்கு இணையான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய அறிவியல் - ஆராய்ச்சி நிறுவனமான ஐக்கிய அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது.
மலையிலிருந்து நீர் பாய்ந்துவரும்போது, பருவமழைக் காலம் என்பதால் ஏற்கெனவே தேங்கியிருந்த நீர், வண்டல் மண்ணை வழியெங்கும் அள்ளி வந்து, கட்டுபாடின்றி வெள்ளமாகப் பாய்ந்துள்ளது.
மேலும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் பனிவெடிப்பு ஏற்பட்டதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்று ஜெர்மனியின் பெர்லினைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஸ்வாங்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தப் பேரழிவிற்கான உண்மைக் காரணத்தை அறிய பல வாரங்கள் கூட ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.