உலகின் மகிழ்ச்சியான ‘நாடு’ எது என்றால் கேட்டால், உடனே டென்மார்க், பின்லாந்து அல்லது ஐஸ்லாந்து என்று சொல்வார்கள். ஆனால், உலகின் மகிழ்ச்சியான ‘நகரம்’ எதுவென்றால் பலவிதமான பதில்கள் வந்துவிழும்.
இந்த நிலையில், டைம் அவுட் இண்டக்ஸ் உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அபுதாபி முதலிடம் பிடித்திருப்பதுதான் பலருக்கும் ஆச்சரியம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) தலைநகரான அபுதாபியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இது துபாய்க்குப் பிறகு அதிக மக்கள் வாழும் நகரமாகும். இது மிகப்பெரிய பணக்கார நகரமும் கூட.
அபுதாபி மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம்?
டைம் அவுட் இன்டெக்ஸ் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 18,000க்கும் மேற்பட்ட நகர்வாசிகளிடம் மகிழ்ச்சியான நகரம் எது என்று கணக்கெடுப்பு நடத்தியது.
அதில், பன்முக கலாச்சாரம், இரவு வாழ்க்கை, விலைவாசி, பாதுகாப்பு, நடைப்பயிற்சி மற்றும் உணவு போன்றவற்றில் அபுதாபி டாப்பில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘அபுதாபியில் வாழ்வது தங்களுக்கு மகிழ்ச்சித் தருவதாக’ இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள்
கொலம்பியாவின் மெடிலின், தென்னாப்ரிக்காவின் கேப் டவுன், மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டி, இந்தியாவின் மும்பை, சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளன.