பிரான்ஸை மட்டுமல்ல; உலகையே அதிர வைத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான டொமினிக் பெலிகாட் உட்பட ஐம்பது பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
இந்தியாவில் மட்டும்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறதா என்றால் இல்லை. கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலும் இதே அவல நிலைதான். அதிலும் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், தந்தை போன்றோர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் நெஞ்சை பதற வைக்கின்றன.
பிரான்சில் உள்ள மசான் என்ற கிராமத்தில் டொமினிக் (வயது 71) என்ற முதியவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த வயதில் என்ன தவறு செய்திருப்பார்? எதற்காக இந்த கைது என்ற கேள்வி எழலாம்.
இந்த வயோதிகர், வணிக வளாகம் ஒன்றில் குட்டைப் பாவாடை அணிந்து வந்த பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளார்.
இது தொடர்பான புகாரில் டொமினிக்கை கைது செய்த காவல் துறை, அவரது மொபைல், கம்ப்யூட்டரை சோதனையிட்டுள்ளார். அப்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது போனில் தனது மனைவியை பலர் பலாத்காரம் செய்யும் போட்டோக்கள் வைத்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த பத்து (2011- 2020) ஆண்டுகளாக தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் பிடித்துள்ளார் டொமினிக். மனைவி கிசெலினுக்கு தெரியாமல் அவரின் சாப்பாடு அல்லது மதுவில் தூக்க மாத்திரை, போதை பொருளை கலந்துள்ளார். அவர் ஆழ்ந்த மயக்க நிலையை அடையும்போது, அவர் பிடித்த வாடகை நபர்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்யவைத்துள்ளார். இந்த காரியத்தை அவர் பத்தாண்டுகளாக செய்துள்ளார். இதனால், கிசெலினுக்கு இடுப்பு வலி, நினைவு இழப்பும் ஏற்பட்டுள்ளது.
27 முதல் 74 வயதுடையவர்களே இந்த இந்த கொடுங்குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் தீயணைப்பு வீரர்கள், காவலர்கள், லாரி ஓட்டுநர்கள் என பலரும் அடக்கம். இதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் உள்ளன.
டொமினிக் தன் மனைவியை மட்டுமல்லாமல் தன் மகள் மற்றும் இரு மருமகள்களையும் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டொமினிக் தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 50 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான சிறைத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகையே உலுக்கிய இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரான 72 வயதான மூதாட்டி கிசெல் பெலிகாட் தனது அடையாளத்தை தீரத்துடன் வெளிப்படுத்திக் கொண்டார். இது பொதுமக்கள், ஊடகங்கள் இந்த விசாரணையின் தன்மையை அறிந்துகொள்ள வழிவகை செய்வதால், இன்று பிரான்ஸின் பெண் உரிமைகளுக்காகப் போராடும் அடையாளமாக அறியப்படுகிறார் கிசெல்.