“டிராகனும் யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்”

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்
Published on

“டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.” என சீன அதிபர் ஜின்பிங் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை பிரச்சினை, அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், “சீனாவும், இந்தியாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள். நாம் சிறந்த அண்டை நாட்டு நட்புறவுகளைக் கொண்ட நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும். டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த ஆண்டு ரஷியாவின் கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற சந்திப்பில், இந்தியா-சீனா இடையிலான உறவுகளை நேர்மறையான திசையில் கொண்டு செல்வது குறித்து பேசப்பட்டது. எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லை மேலாண்மை தொடர்பாக எங்கள் சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.

இரு நாடுகளையும் சேர்ந்த 280 கோடி மக்களின் நலன்கள் நமது ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா-சீனா ஒத்துழைப்பு மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிகரமான தலைவராக சீனா பொறுப்பேற்றதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்ததற்கும் இன்று நடைபெற்ற சந்திப்புக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com