மொராக்கோ நிலநடுக்கம்
மொராக்கோ நிலநடுக்கம்

மொராக்கோ நில நடுக்கம்: 1,037 பேர் உயிரிழப்பு - மலைப் பகுதிகளில் மீட்புப் பணி தாமதம்!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம், அட்லஸ் மலைத்தொடரை மையம்கொண்டதாக இருந்தது. மரக்கேஸ் நகரிலிருந்து 71 கி.மீ. தொலைவிலும் 18.5 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரவு 11.11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வு ஏற்பட்டது.

மரக்கேஸ், ஓவர்சசட், அசிலல், சிசௌவா, தரோடண்ட் ஆகிய மாநிலங்கள், நகரங்களில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

மரக்கேஸ் பகுதி மருத்துவமனைகளில் காயமடைந்து ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன.

யுனஸ்கோவின் பாரம்பரியப் பகுதியாக அறிவிக்கப்பட்ட மெடினா நகரில் வீடுகள் சேதமடைந்தும், முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகவும் ஆகியுள்ளன.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், பாதிக்கப்பட்ட இடங்கள் மலைப் பகுதிகளில் தொலைவிலுமாக இருப்பதாலும் மீட்புப் பணியில் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com