இரண்டு வாரங்களுக்குள் டிரில்லியனர் மதிப்பை இழந்த எலான் மஸ்க் !

Elon Musk
எலான் மஸ்க்
Published on

அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால், உலகின் முதல் டிரில்லியனர் என்ற மதிப்பை இரண்டு வாரங்களுக்குள் எலான் மஸ்க் இழந்துள்ளார்.

பொது நிறுவனமாகி வெறும் 11 நாள்களில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஜூன் மாத நடுப்பகுதியில் அடைந்த உச்சபட்ச மதிப்பிலிருந்து 30%க்கும் மேல் சரிந்தது. டெஸ்லாவும் 5.8% சரிந்து இந்த இழப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 16% வீழ்ச்சியை இரு நிறுவனங்களும் சந்தித்தன. அனைத்து நிறுவனங்களும் தன் பங்குகளின் சரிவைச் சந்தித்த நிலையில், எலான் மஸ்க் தனது டிரில்லியனர் மதிப்பை இழக்கும் அளவிற்குச் சென்றதன் காரணம், அவரின் மொத்த செல்வங்களும் இந்த இரண்டு நிறுவனங்களைச் சார்ந்து இருந்ததுதான்.

ஸ்பேஸ் எக்ஸில் அவரது பங்கு மதிப்பு 744 பில்லியன் டாலர் அதாவது அவரது நிகரச் சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 80% ஆகும். மீதமுள்ளவற்றில் பெரும்பகுதியை டெஸ்லா கொண்டிருந்தது. அதன் மதிப்பு 158 பில்லியன் டாலர் ஆகும்.

இந்த இரு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் தனது சரிவைச் சந்தித்ததால், அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், எலான் மஸ்க்கின் முதலிடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. அவருக்கு அடுத்த பணக்காரரான கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜின் சொத்து மதிப்பு 297 பில்லியன் டாலர் ஆகும்.

அவரைவிட எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 660 பில்லியன் டாலர் அதிகமாக உள்ளது.

மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 6% ஏற்றம் ஏற்பட்டால்கூட , எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு மீண்டும் 1 டிரில்லியன் டாலருக்கும் மேல் உயர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com