முகநூல், வாட்சாப், இன்ஸ்டாகிராம் உட்பட்ட பிரபல சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு எதிராக 26 ஊழியர்கள் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கில், பணிநீக்கத்திற்கான ஊழியர்களைத் தேர்வு செய்ய ஏஐ அடிப்படையிலான மதிப்பீட்டுக் கருவிகளை மெட்டா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த பணிநீக்கப் பட்டியலில், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, முக்கிய குடும்ப வேலைகளுக்கான விடுப்பு ஆகிய சட்டப்பூர்வ விடுப்பில் இருந்த ஊழியர்கள் அதிக அளவில் இடம்பெற்றதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களின் செயல்திறனை ஏஐ கணக்கிடும்போது, அவர்கள் விடுப்பில் இருந்தற்கான காரணத்தை கருத்தில்கொள்ளாமல், காலத்தை மட்டும் கருத்தில்கொண்டு ஏஐ மதிப்பெண்களை வழங்கியுள்ளது.
இதனால் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், குடும்பப் பொறுப்புகளுக்காக விடுப்பு எடுத்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. பணிநீக்க முடிவுகளை ஏஐ எடுக்கவில்லை என்றும், பணிபுரியும் மேலாளர்களால் மட்டுமே இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.