போர்பூமியாக மாறிவரும் மத்திய கிழக்கில் நேற்று திடீரென ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் தொடுத்தநிலையில், டென்மார்க் நாட்டில் இஸ்ரேலியத் தூதரகம் அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகன் நகரின் வடபகுதியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்துக்கு மிக அருகில் இரண்டு முறை குண்டுவெடித்துள்ளது. டென்மார்க் காவல்துறை இதை உறுதிப்படுத்தியுள்ளது. விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
“ இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் தொடக்கக் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்.” என்று கோபன்ஹெகன் காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
” இந்த வட்டாரத்தில் இஸ்ரேலியத் தூதரகமும் இருப்பதால், அதற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து வருகிறோம்.” என்றும் டென்மார்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தூதரகத்தின் தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.