பிஃபா கால்பந்துப் போட்டியைக் கவனிக்க வைக்கும் ஏஐ!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி
உலகக்கோப்பை கால்பந்து போட்டி
Published on

பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இன்று பிரமாண்டமாகத் தொடங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி, இந்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன. 16 நகரங்களில், 104 போட்டிகள் நடைபெறும் இப்போட்டியில், 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த பிஃபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் கண்காணிப்பில் நடைபெற உள்ளது.

போட்டிகளில் பயன்படுத்தவுள்ள 'அடிடாஸ் ட்ரியோண்டா' பந்திற்குள் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் ஒரு நிமிடத்திற்கு 500 தரவுகளைச் சேமிக்கும். பந்தின் மீதான தொடுதலையும், அதன் சுழற்சியையும் குறித்த துல்லியமான தகவல்களை ஏஐ தரும்.

போட்டியில் பங்கேற்கும் 1,248 வீரர்களும் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஸ்கேன் மூலம் வீரர்களின் 3 டி டிஜிட்டல் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் உதவியுடன் 'ஆஃப் சைடு' முடிவுகளை எவ்விதக் குழப்பமும், விவாதங்களும் இன்றி நடுவர்களால் எடுக்க முடியும்.

மேலும், லெனோவா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ’ஃபுட்பால் ஏஐ புரோ‘ என்ற மென்பொருள் கருவி அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது போட்டியின் முழுமையான பகுப்பாய்வு, வீரர்களின் தரவுகள், ஆட்ட உத்திகள் ஆகிய தகவல்களைக் கொடுக்கும்.

முன்னரெல்லாம், பெரிய அணிகள் மட்டுமே கோடிக்கணக்கில் செலவிட்டு இந்தத் தகவல்களைப் பெற்றன. இப்போது உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

தொலைக்காட்சிகளில் பார்க்கும் இரசிகர்கள் நேரடியாக மைதானத்தில், வீரர்களுக்கு அருகிலிருந்து போட்டியைப் பார்க்கும்படி உணர்வதற்காக 'ஃரெப்ரீ வியூ' என்ற ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகமே உற்றுநோக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி, இந்த ஆண்டு ஏஐ உதவியில் நடக்கவிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com