கடந்த புதன்கிழமை நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில், பனிப்பாறைச் சரிவால் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இதனால், கோஷி நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மூன்றாவது நாளான நேற்று மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 616 ஆகவும், இந்தியர்கள் 320 பேர் உட்பட மொத்தம் 2000 பேரைக் காணவில்லை என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7,450 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கோஷி நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனா, நேபாள நீரியல்-வானிலை ஆய்வுத் துறைகள் எச்சரித்துள்ளன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், நதிக்கரையோரப் பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள பேரிடர் அபாயக் குறைப்பு – மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.