நடப்பாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்ஜெனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிக்காவின் ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கான இவரின் பங்களிப்பிற்காகவும், உயர் ஆற்றல் நியூட்ரினோக்களின் கண்டுபிடிப்புக்காகவும் இவர் நோபல் பரிசு பெறுகிறார்.
எளிதில் சிக்காத பேய்த் துகள்கள் அதாவது கோஸ்ட் பார்ட்டிக்கிள் என்று அழைக்கப்படும் நியூட்ரினோக்களைக் கண்டறியும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். விண்வெளித் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை இவர் கண்டறிந்துள்ளார்.
பிரான்சிஸ் ஹால்ஜெனின் வழிகாட்டுதலின் கீழ் 2011-ல் முழுமையாகக் கட்டப்பட்ட இந்த ஆய்வகம், பிரபஞ்சத்தின் பல ரகசியங்களை உடைத்துள்ளது.
ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் அண்டார்ட்டிக்காவில் உள்ள பனிப்பாறைகளின் மேற்பரப்பிலிருந்து 1,450 மீட்டர் முதல் 2,450 மீட்டர் ஆழத்தில், ஒரு கன கிலோமீட்டர் பரப்பளவில் பனிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
பனியைத் துளைத்து போடப்பட்ட 86 துளைகளில், செங்குத்தான கம்பிகளின் உதவியுடன் 5,160க்கும் மேற்பட்ட பந்து வடிவ ஆப்டிகல் சென்சார்கள் பனிக்குள் புதைக்கப்பட்டுள்ளன.
அண்டார்ட்டிக்காவில் பனி மிகவும் தூய்மையாக உள்ளதுடன், ஒளியை ஊடுருவும் தன்மையுடனும் இருப்பதாலும், வெளிப்புற ஒளியின் குறுக்கீடு இல்லாததாலும் இந்த இடத்தை ஆய்வகம் அமைக்கத் தேர்வு செய்தனர்.
அணுவிற்குள் இருக்கும் ஓர் அடிப்படைத் துகளான நியூட்ரினோக்கள் பிரபஞ்சத்தில் எதன் மீதும் மோதாமல் எளிதாகக் கடந்து செல்லக்கூடியவை. ஆனால், எப்போதாவது ஒரு நியூட்ரினோ பனியில் உள்ள அணுக்களோடு மோதும்போது, அது மின்சுமையுள்ள துகள்களையும், செரென்கோவ் கதிர்வீச்சு எனப்படும் ஒரு மங்கலான நீல நிற ஒளியை உமிழும்.
இந்த நீல நிற ஒளி வடிவத்தை பனிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறியும். இதன் மூலம் நியூட்ரினோ எங்கிருந்து வந்தது, அதன் ஆற்றல் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
இத்தகைய உயர் ஆற்றல் நியூட்ரினோக்கள் குறித்த கண்டுபிடிப்பிற்காக 82 வயதான விஞ்ஞானி, பிரான்சிஸ் ஹால்ஜென் நோபல் பரிசைப் பெறுகிறார்.