ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் இராணுவ அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது என்று காசா அரசு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.