அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டினரை கடுமையாக குறிவைத்துள்ளார். முதற்கட்டமாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தினார். இதில் ஏராளமான இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும், அதை கண்டுகொள்ளாத டிரம்ப், அடுத்ததாக அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டினர் திருடுவதாக குற்றம் சாட்டிய அவர், அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கே வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையில் இறங்குவேன் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்து உள்ளார். அதாவது வெளிநாட்டினருக்கான எச்1-பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ. 1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார்.
‘இந்த நடவடிக்கை அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கடும் உத்தரவால் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஆண்டுதோறும் 1 லட்சம் டாலரை அரசுக்கு செலுத்த வேண்டும். இதனால் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை அவர்கள் மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் எச்1-பி விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப குடியேற்ற அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. விடுமுறை, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த நாடு சென்றுள்ள மேற்படி விசாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்றுக்குள் அமெரிக்கா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், `எச்1-பி' விசா கட்டண உயர்வு தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க விசா கட்டண உயர்வு புதிதாக விசா கேட்டு விண்ணப்பம் செய்பவருக்கு மட்டும் தான் 1 லட்சம் டாலர் கட்டணம். ஏற்கனவே எச்1-பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை பொருந்தாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.