
பாதி ஆண், பாதி பெண் உடல் தோற்றத்துடன் கூடிய அரியவகை சிலந்தி ஒன்று தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் நோங்ரோங்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் காட்டுலாவின்போது குழிதோண்டினார்கள். அப்போது வித்தியாசமான இந்தச் சிலந்தியைக் கண்டனர்.
இதன் தனித்துவமான பண்புகளை சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்தனர். சிலந்தியின் உடல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இருந்ததைக் கண்டு, அவர்கள் வியந்துபோனார்கள்.
அச்சிலந்திக்கு ’டமார்க்ஸ் இனாசுமா’ என பெயர் சூட்டியுள்ளனர். சிலந்தியின் உடல் ஒரு பாதி ஆரஞ்சு நிறத்திலும் மற்றொரு பாதி சாம்பல் நிறத்திலும் உள்ளது.
இடது பக்கம் பெண் தன்மையுடனும் வலது பக்கம் ஆண் தன்மையுடன் உள்ள இந்த தொடர்பான ஆய்வுக்கட்டுரை சூட்டாக்சா (Zootaxa) எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
ஒரே உடலில் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருப்பது அரிய வகை நேர்வாகும். இதை அறிவியலில் கைனாண்ட்ரோ மார்பிசம் (Gynandromorphism) என்பார்கள்.
பொதுவாக, பட்டாம்பூச்சி போன்ற சில உயிரினங்களில் இந்த அரிய நேர்வு காணப்படுகிறது.