பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியத்தில் கடந்த ஞாயிறு காலையில் நடந்த திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலை மதிக்கமுடியாத மதிப்பிலான பழங்கால நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட திரைப்படங்களில் வரும் காட்சியைப் போல திட்டமிட்டு அது நடத்தப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு லூவர் அருங்காட்சியகத்தின் ஓரமாக ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஏணி அருங்காட்சியகக் கட்டடத்தின் இரண்டாவது மாடி வரைக்கும் நீண்டது. அதில் ஏறிய கொள்ளையர்கள் அங்கிருந்த கண்ணாடி ஜன்னலை வெட்டி உள்ளே குதித்தனர். அவர்கள் நுழைந்த பகுதி அப்பல்லோ கேலரி எனப் படுவதாகும். அவர்கள் உள்ளே போனதுமே பாதுகாப்பு அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சமயம் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர். கொள்ளையர்கள் நுழைந்த இடத்தின் அருகே சுமார் ஐந்து அருங்காட்சியக ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் கொள்ளையர்களால் மிரட்டப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அடுத்ததாக அருங்காட்சியக வழிமுறைப்படி பார்வையாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
அதே சமயம் கொள்ளையர்கள் அங்கிருந்த கண்ணாடிக் காட்சிப் பெட்டிகளை உடைத்து, அவற்றுள் இருந்த வைரமும் மாணிக்கக் கற்களும் கொண்ட நகைகளை எடுத்துக்கொண்டு வந்தவழியே திரும்பினர். கீழே இரண்டு ஸ்கூட்டர்கள் அவர்களுக்காகக் காத்திருந்தன. அதில் ஏறி போயே போய்விட்டார்கள். எட்டே நிமிடங்களில் வேலை முடிந்தது.
அவர்கள் திருடிச் சென்றவை
நீல மாணிக்கக் கல்லால் ஆன கழுத்தணி, மரகதக் கற்கள் கொண்ட கழுத்தணி, அரச மணிமுடி என ஆகமொத்தம் எட்டு விலை உயர்ந்த அணிகளை அவர்கள் எடுத்துச் சென்றனர். பிரஞ்சு அரசர் மூன்றாம் நெப்போலியனின் அரசியார் அணிந்திருந்த அரச அணிகலன்கள் இவை ஆகும்.
பிரெஞ்சு அரசியார் ஒருவரின் கிரீடம் ஒன்றையும் அவர்கள் எடுத்துச் செல்ல முயன்றபோது அவசரத்தில் கீழேபோட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து அருங்காசியகம் அன்றைய தினம் பார்வையாளர்களை அனுமதிக்காமல் மூடப்பட்டது.
திருடர்களை பிரெஞ்ச் காவல்துறை தேடி வருகிறது. திருடியவர்கள் கலைப்பொருட்களைத் திருடுகிறவர்கள் அல்ல. நகைத் திருடர்கள் தான் என்று காவல் அதிகாரிகள் கூறினர். நகைகளில் உள்ள விலை உயர்ந்த கற்களைப் பிரித்து விற்றுவிடலாம். தங்கத்தை உருக்கிவிடலாம். இதன்மூலம் காவல்துறையிடம் பிடிபடாமல் தப்பிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. அதற்குள் பிடித்தால் தான் இந்த அரிய நகைகள் கிடைக்கும். ஏராளமான வைர, மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்டவை, காலத்தால் பழையவை என்பதால் இவற்றின் மதிப்பு கணக்கிட முடியாதது.
” இது நமது பெருமைக்குரிய கலாச்சார வரலாற்றின் மீதான தாக்குதல். இதை நிகழ்த்தியவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்துவோம். இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்’ என பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் கூறி உள்ளார்.
லூவர் அருங்காட்சியம் பிரான்ஸ் நாட்டின் பழைய அரண்மனைகளில் ஒன்று. பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னால் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 33000 அரிய பொருட்கள் காட்சிக்கு உள்ளன. உலகம் முழுவதிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மிகப்பழங்கால கலைப்பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இங்கு உள்ளன. தினமும் 30,000 பேர் இதைப் பார்வையிடுகின்றனர். உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகம் இதுவே. பெரும்பாலானவர்கள் இங்குள்ள புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தைக் காணவே ஆவலுடன் வருகிறார்கள்.
லூவரில் கலைப்பொருட்கள் திருடப்படுவது முதல்முறை அல்ல. 1911-இல் மோனாலிசா ஓவியமே திருடப்பட்டது. இங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் மேல் அங்கிக்குள் இதை வைத்து லவட்டிக்கொண்டு போய்விட்டார். மூன்றாண்டுகள் தேடி, இத்தாலியில் விற்கப்படும்போது அந்த ஊழியர் பிடிபட்டு ஓவியம் மீட்கப்பட்டது. 1976-ல் பத்தாம் சார்லஸ் மன்னரின் தங்க வாள், 1990 இல் ரெனாயரின் ஓவியம் ஒன்று ஆகியவையும் களவு போயின.