லேப்டாப் வைத்திருக்கும் பலருக்கு அதன் பேட்டரிகள் விரைவில் சார்ஜ் போய்விடுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கும். ஸ்மார்ட்போன் போல லேப்டாப்பும் தற்போது அத்தியாவசியமான எலெக்ட்ரிக் கேட்ஜெட்டாக மாறிவிட்டது. ஆகையால் அதன் பேட்டரி ஆயுளை பேணிப் பாதுகாப்பது எப்படி? விரைவாக ஏற்படும் சார்ஜ் இழப்பை தவிர்ப்பது எப்படி? என்ற சில டிப்ஸ்களை இங்க் பார்ப்போம்!
நாம் பயன்படுத்தும் லேப்டாப்புகளின் பேட்டரிகள் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் – அயன் பேட்டரிகளால் ஆனவை. இவை காலப்போக்கில் செயல் திறனை இழக்கக் கூடியவை என்றாலும், அவற்றை முறையாக பராமரிப்பது அவசியமானதாகும்.
இப்போது வரும் லேப்டாப்புகளில் தேவைக்கு அதிகமாக சார்ஜ் ஆகாமல் இருக்க கட்டுப்பாட்டு சர்க்யூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. சூடாகாமல் இருக்க சென்சார்கள் உள்ளன. இருந்தாலும் 100 சதவீதம் சார்ஜ் போடுவது அல்லது முழுமையாக சார்ஜ் போகும்வரைப் பயன்படுத்துவது இரண்டுமே பேட்டரியின் ஆயுளை நிச்சயம் குறைக்கும். அதாவது நூறு சதவீதம் சார்ஜ் ஏற்றவேண்டாம். ஜீரோ என்று காட்டும் அளவுக்கும் விடவேண்டாம்.
மேலும், அதிக வெப்பநிலையில் லேப்டாப்பை வைத்திருந்தால் பேட்டரிகள் மிக வேகமாக சிதைந்து விடும். அதிக வெப்பம் - அதிக குளிர்ச்சி பேட்டரியின் ஆயுளுக்கு நல்லதல்ல. சரியான வெப்பநிலையில் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.
லேப்டாப்க்கு 100 சதவீதம் சார்ஜ் போடுவதை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிந்துரைப்பதில்லை. 80 சதவீத சார்ஜே போதுமானது என்கிறது. எல்லா நேரங்களில் சார்ஜர் இணைக்கப்படுவது நல்லதல்ல என்கின்றனர். எப்போதும் சார்ஜரை இணைத்துப் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்கவேண்டும்!
லேப்டாப்பை கொஞ்சநாளைப் பயன்படுத்தப் போவதில்லை. அணைத்து வைக்கப் போகிறீர்கள் என்றால், அதை ஈரப்பதம் இல்லாத இடத்தில் சாதாரண வெப்பநிலை நிலவும் இடத்தில் வையுங்கள். அதன் பேட்டரியில் சுமார் 50 சதவீத சார்ஜ் இருப்பது நல்லது. முழுமையாக சார்ஜ் இறங்கிப்போய் ஏற்படும் பேட்டரி கோளாறுகளை இது தவிர்க்கும்!
லேப்டாப்பில் உள்ள ஃபேனை சுத்தமாக வைத்தால் அது லேப்டாப் இயங்கும்போது உள்ளே இருக்கும் பாகங்களை குளிர்வாகவே வைத்திருக்கும். வெப்ப நிலை உயராதபோது, அவை எடுக்கும் மின்சார அளவும் குறைவாகவே இருக்கும்.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகள் 80 சதவீத அளவுக்கே ரீசார்ஜ் ஆகும். இது Optimized Battery Charging என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டது.
விண்டோஸ் பயன்படுத்தும் லேப்டாப்புகளில் Smart charging என்ற வசதி இருக்கும். அதை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்டவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு லேப்டாப் செட்டிங்கில் பவர் சேவர் போன்றவற்றை ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது விரைவாக சார்ஜ் இழப்பைத் தவிர்க்க உதவும்.
இதையெல்லாம் தாண்டி நீங்கள் லேப்டாப்பை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் ஆயுள் இருக்கும்!
தேவையில்லாத ப்ரோகிராம்கள் எதுவும் பின்னணியில் நமக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதா என்று பார்த்து அவற்றை அணைத்து வைப்பதும் பேட்டரியின்பயன்பாட்டைக் குறைத்து வாழ்நாளை அதிகப்படுத்தும்!