சமூக ஊடகங்களில் மூழ்கிய இளம் சிறார்
சமூக ஊடகங்களில் மூழ்கிய இளம் சிறார்

வேட்டையாடும் சமூக ஊடகங்கள்… நம் சிறார்களைக் காப்பது எப்படி?

அமெரிக்கத் தலைமை மருத்துவர் சொல்லும் வழி

சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருக்கிறீர்களா?

நீங்கள் மட்டும் இல்லை.

அமெரிக்கத் தலைமை மருத்துவராகப் பதவி வகிப்பவரே இப்படித்தான் நினைக்கிறார்.

நியூயார்க் டைம்ஸில் அமெரிக்கத் தலைமை மருத்துவரான விவேக் மூர்த்தி (ஆம் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான்) எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில், இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசி இருப்பதுடன், தீர்வு ஒன்றையும் முன்வைக்கிறார்.

சமூக ஊடகத்தில் தினமும் மூன்று மணி நேரம் அளவுக்குச் செலவழிக்கும் பதின் வயதைச் சேர்ந்த குழந்தைகளில் பெரும்பாலோர், மன அழுத்தத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதைச் சுட்டிக்காண்பிக்கிறார், அவர்.

இளம் பிராயத்தினரிடம் மனநலப் பிரச்னைகள் அதிகரிக்கின்றன. அதற்கு சமூக ஊடகமே பிரதான காரணியாக இருக்கிறது என்பது இவரின் முடிவு.

சிறு பிள்ளைகளுடன் சமூக ஊடகங்கள் உறவாடும் முறையை மாற்றவேண்டும் என்கிற இவர், எப்படி சிகரெட் விளம்பரத்தில் எச்சரிக்கை வார்த்தைகள் உள்ளனவோ, அதைப்போல சமூக ஊடகப் பக்கங்களிலும் அதிகமாகப் பார்க்கப்பட்டால் இவை ஏற்படுத்தும் மனநலப் பிரச்னைகள் பற்றி எச்சரிக்கை வாசகம் இடம்பெறவேண்டும் என்கிறார். இதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க காங்கிரஸை இவர் வலியுறுத்துகிறார்.

இப்படி எச்சரிக்கை கொண்டுவந்தால்தான் பெற்றோர், சிறுவர் இரு தரப்பினரிடமும் சமூக ஊடகம் ஏற்படுத்தும் மனநலப் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்பது இவரது கருத்து.

இதுமட்டுமல்ல இளஞ்சிறார்களை ஆன்லைன் துன்புறுத்தல், சுரண்டல், அதீத வன்முறைக்குப் பழக்கப்படுத்துவது, பாலியல் காட்சிகள் ஆகியவற்றிலிருந்து காக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

மனநலத்தில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இந்த சமூக ஊடக நிறுவனங்கள் ஆய்வுசெய்து தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும் மூர்த்தி கேட்கிறார்.

அமெரிக்கத் தலைமை மருத்துவரே போர்க்கொடி தூக்கும் அளவுக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com