
ஜமைக்காவின் தென்பகுதியை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
கரிபீயன் தீவுகளில் உள்ள ஜமைக்காவை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட மெலிசா புயல் கடுமையாக தாக்கி உள்ளது.
5ஆம் நிலை கொண்ட புயலாக வலுப்பெற்ற மெலிசா மணிக்கு 300 கிமீ வேகத்தில் ஜமைக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளை தாக்கி, பெரும் மழையையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜமைக்காவின் சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சூறாவளிக்கு மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.
ஜமைக்கா முழுவதும், இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமே இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளியின் பாதிப்புகள் குறித்து அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்லென்ஸ் கூறி உள்ளதாவது;
எங்கள் வரலாற்றில் மிகவும் பயங்கரமான சூறாவளியாக மெலிசா பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற 5ஆம் வகை புயலால் எங்கள் நாடு மட்டுமல்ல, எந்த கட்டமைப்பும் தாங்காது. ஏராளமான மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிகிறோம். இப்போதுள்ள நிலவரப்படி எங்களின் சவால் என்பது மீட்புப் பணிகள் தான் என்றார்.
ஜமைக்காவை சூறையாடி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள மெலிசா இன்று கரையை கடந்தது.
160 மைல் தொலைவில் 3ஆம் நிலை சூறாவளியாக மாறி, தற்போது கியூபா மற்றும் பஹாமசை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையம் கூறி உள்ளது.
இதனால் கியூபாவில் உள்ள சாண்டியாகோ டிகியூபா, குவாண்டனாமோவில் தாழ்வான பகுதிகளில் இருந்து 6 லட்சம் மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.