கரீம் கான், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்
கரீம் கான், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்

இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட்!

இஸ்ரேல் தலைவர்கள், ஹமாஸ் இயக்கத் தலைவர்களைக் கைதுசெய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முதன்மை வழக்கறிஞர் கரீம் கான் கைது ஆணை கோரியுள்ளார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் இராணுவ அமைச்சர் யோவ் காலண்ட் ஆகியோரையும் ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் யாஃக்யா சின்வார், முகமது டீஃப், இஸ்மாயில் ஹனியே ஆகிய மூவரையும், போர்க் குற்றத்துக்காகக் கைதுசெய்ய முதல் முறையாக இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜபாலியா எனும் நகரை ஒட்டியுள்ள அல் அவ்தா மருத்துவமனையானது இஸ்ரேல் படைகளால் கைப்பற்றப்பட்டு, அங்கு யாருக்கும் முற்றிலுமாக தண்ணீர் கிடைக்கவிடாமல் செய்யப்பட்டுள்ளது என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு- எம்.எஸ்.எஃப். சார்பில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது.

முன்னதாக, நேற்று ஞாயிறன்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் ஐமான் சஃபாதியும், காசா பகுதி மீதான இஸ்ரேலின் போருக்காக அந்நாட்டு அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். நுசரெத் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவையும் பிற நாடுகளையும் இணைக்கும் ரஃபா, கரீம் அபு சலேம் பாதைகளில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டால், பின்விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று ஐநா மனிதாபிமான உதவிகள் விவகார தலைமை அதிகாரி மார்ட்டின் கிரிஃபித்சும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இரு தரப்பினர் மீதும் போர்க் குற்றச்சாட்டுகள் பதிய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் ஹமாஸ் இயக்கத்தினரால் 1,139 இஸ்ரேலியர்களும் கணிசமான அயல்நாட்டினரும் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலின் கொடூர இராணுவத் தாக்குதல்களில் 35ஆயிரத்து 456 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 79ஆயிரத்து 476 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐசிசியின் இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்பு உண்டாக்கிவருபவர்களையும் சமமாகப் பார்ப்பதாக ஹமாஸ் இயக்கம் குறைகூறியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com