
இரசியா, வெனிசுலா முதலிய நாடுகளை வைத்து, அடுத்தடுத்து உலக நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டிவரும் நிலையில், அதற்கு ஆப்பு வைக்கும்வகையில் இந்தியா புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் தலைவர் உருசுலாவுடன் பிரதமர் மோடி இணைந்து இன்று தடையற்ற வர்த்தக உடன்பாடு கையெழுத்தானது. இது வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் எனப் போற்றப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்தத் தடையற்ற ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நாட்டின் இறக்குமதி வேறுமாதிரியாக மாறவுள்ளது. இதேபோல, ஐரோப்பாவின் ஏற்றுமதி வர்த்தகத்திலும் குறிப்பான மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தானியங்கி வாகனத் துறையைக் குறிப்பிடுகிறார்கள். தற்போது சுமார் 70 சதவீதம்வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் ஐரோப்பிய கார்களுக்கான வரி 10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும். இது மிகப் பெரும் வீழ்ச்சியாக இருக்கும்.
ஆண்டுக்கு 2.5 இலட்சம் கார்களுக்கு இந்த வரிவிதிப்பு பொருந்தும்வகையில் மாற்றம் இருக்கும். இது மட்டுமேகூட இந்தியாவின் கார் சந்தையில் பெரும் மாறுதலை உண்டாக்கும் என ஐரோப்பிய ஒன்றியத் தரப்பு கூறுகிறது.
மேலும், இந்தியாவிற்குள் வரும் ஐ.ஒ. பண்டங்களில் 90 சதவீதத்திற்கும்மேல் வரி குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
வரும் 2032ஆம் ஆண்டுக்குள் ஐ.ஒ. இந்தியாவுக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்; வரிக்குறைப்பின் மூலம் ஆண்டுக்கு 400 கோடி யூரோவரை சேமிக்கமுடியும். இயந்திரங்களைப் பொறுத்தவரை தற்போது 44 சதவீதம்வரையும், வேதிப்பொருட்களுக்கு 22 சதவீதம்வரையும், மருந்துப்பொருட்களுக்கு சுமார் 11 சதவீதம்வரையும் வசூலிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உணவு, பான வகைகளும் பெரும் வரிமாற்றத்துக்கு உள்ளாகவுள்ளன. ஐரோப்பிய ஒயினுக்கு 20-30 சதவீதம்வரையும், ஸ்பிரிட்டுக்கு 40சதவீதம்வரையும், பீருக்கு 50சதவீதம்வரையும் வரி குறைக்கப்படும்.
இதேசமயம், அங்கிருணந்து வரும் ஆலிவ் எண்ணெய், செயற்கை வெண்ணெய், தாவர எண்ணெய் வகைகளுக்கான வரிகள் குறைக்கப்படவோ நீக்கப்படவோ வாய்ப்பு உண்டு.
மருத்துவக் கருவிகளுக்கு மிகப் பெரிய தாராளமாக முற்றிலும் வரியே இல்லாமலும் ஆக்கப்படலாம்.
இதேசமயம், நிதி, கடல்சார் சேவைகள் துறையில் ஐரோ. ஒன்றியம் சாதகங்களைப் பெற்றுள்ளது. இந்தத் துறைகளில் இப்போதுதான் இந்தியா மெல்ல மெல்ல தலையெடுத்து முன்னேறத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புவிவெப்பமய வாயுக்களைக் குறைக்க இந்தியாவுக்கு 50 கோடி யூரோ நிதியை வழங்க முடிவுசெய்துள்ளது.
ஐரோப்பாவில் இறக்குமதியாகும் இந்திய வர்த்தகப் பொருட்களுக்கு அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு99.5 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரியைக் குறைப்பதாக ஐ.ஒ. தெரிவித்துள்ளது. கடல்சார் தயாரிப்புகள், தோல், துணிமணிகள், வேதிப்பொருட்கள், இரப்பர், அடிப்படை உலோகங்கள், நகைகள், முத்துகள் ஆகியவை இதில் அடங்கும் என வர்த்தகத் தொழில் துறை அமைச்சகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாதபடியாக சந்தையைத் திறந்துவிடும் என்றும் இதேவேளை உலக அளவில் மிக விரைவாக வளரும் நுகர்வோர் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் ஐரோப்பா வலுவாகக் கால்பதிக்கப் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கோ உள்நாட்டுப் போட்டியாளர்களைத் தாண்டி தானியங்கி, இயந்திரங்கள், வேதிப்பொருட்கள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றில் ஐரோப்பியப் போட்டியாளர்களுடன் சவாலாக நின்றுகாட்டுவது முக்கியமானதாக உள்ளது.