வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் பற்றி எரியும் வணிக வளாகம்.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் பற்றி எரியும் வணிக வளாகம்.

மீண்டும் வெடித்த வன்முறை... அவசர அறிவிப்பை வெளியிட்ட இந்தியா!

Published on

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், ”மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடர்ந்து, வன்முறை படிப்படியாகக் குறைந்தது.

இருப்பினும், இந்தப் போராட்டத்தின்போது மாணவர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் மற்றும் காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். சுமாா் 60 போ் காயமடைந்தனா்.

போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை சனிக்கிழமை நிராகரித்த போராட்டக்காரர்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று முதல் அரசுக்கு எதிராக காலவரையற்ற ஒத்துழையாமை போராட்டத்தை ‘மாணவர் பாகுபாடு எதிர்ப்பு இயக்கம்’ அறிவித்தது.

தலைநகர் டாக்காவின் புகா் பகுதியான முன்ஷிகஞ்சில் நேற்று ஒத்துழையாமை போராட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கும், அவாமி லீக் கட்சியினர், அக்கட்சியின் மாணவர் அணியான சத்ரா லீக், இளைஞர் அணியான ஜுபோ லீக் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினர் உள்பட 72 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்கா உள்பட பல்வேறு நகா்ப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. இன்று முதல் 3 நாள்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கதேசத்தின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்.

தற்போது வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். அவர்கள் டாக்காவில் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com