ஈரான் ஹெலிகாப்டர் விபத்துப் பகுதி
ஈரான் ஹெலிகாப்டர் விபத்துப் பகுதி

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாகியான் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் மழையில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான அஜர்பைஜானும் ஈரானும் சேர்ந்து அமைத்த அணைக்கட்டு ஒன்றைத் திறந்துவைக்கும் விழாவில், ஈரான் அதிபரும் அமைச்சர்களும் நேற்று கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து மூன்று ஹெலிகாப்டர்களில் அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அதில், ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் திடீரெனக் காணவில்லை. அது ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

அதில் பயணித்தவர்களின் கதி என்ன எனத் தெரியாமல் இருந்தது. ஈரான் நாட்டுத் தலைவர் அயதுல்லா கொமேனி, ரைசிக்காக பிரார்த்திக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். அதன்படி நாடு முழுவதும் ரைசிக்காக ஆங்காங்கே பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

பனி மூட்டம், மழை என மோசமான வானிலை காரணமாக விபத்துப் பகுதியைச் சென்றடைவதில் ஈரான் மீட்புப் படையினருக்கு சிரமம் இருந்தது. ஆனாலும் துருக்கி தன் டிரோன்களை அனுப்பியது. ரசியாவும் தன்னிடமிருந்து மீட்புக் கருவிகளை அனுப்பியது. வேறு பல நாடுகளும் மீட்புப் பணியில் உதவிசெய்தன.

தவல் எனும் கிராமத்தை ஒட்டிய பகுதியில் மொத்தம் 73 மீட்புப் படைகள் தேடுதலில் ஈடுபட்டன. துருக்கியின் டிரோன் ஒருவழியாக விபத்துப் பகுதியைக் கண்டறிந்தது.

ஈரானின் செம்பிறை மீட்புக் குழுவினர் விபத்துப் பகுதியை அடைந்தனர். அரை மணி நேரத்துக்கு முன்னர் அவர்கள் விபத்துக்கு உள்ளான ஈரான் அதிபரின் ஹெலிகாப்டரைக் கண்டறிந்தனர். ஆனால் அதில் எந்திரம் உட்பட அனைத்துப் பகுதிகளும் நொறுங்கி எரிந்து சேதமாகிவிட்டதை அவர்கள் உறுதிசெய்தனர்.

எனவே, அந்த ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று செம்பிறை அமைப்பின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவிண்ட் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.

ஆனால் ஈரானின் அரசுத் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com