இஸ்ரேல் மீது ஈரான் படை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் படை தாக்குதல்

ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் சேதம் - அமெரிக்கா ஆவேசம்!

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திவரும் கொடூரப் போர்த் தாக்குதலின் இடையே திடீர்த் திருப்பமாக, ஈரானியப் படை இஸ்ரேலின் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

கடந்த ஒன்றாம் தேதியன்று சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில், ஈரானின் இசுலாமியப் பாதுகாவலர் படையின் தளபதி உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு எனஈரான் கூறியபோதும், அதை இஸ்ரேல்ஏற்கவோ மறுக்கவோ இல்லை. 

இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு கடந்து ஜாமம் உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இஸ்ரேலின் வர்த்தகத் தலைநகர் டெல் அவிவ், புனித நகரான ஜெருசலேம், பாலைவன அணு உலை நகரான ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இசுலாமியப் புரட்சிப் படை கூறியது. 

ஆனால், ஈரானின் தாக்குதலில் சிறிதளவே சேதம் ஏற்பட்டதாகவும் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் எல்லைக்கு வெளியிலேயே வழிமறித்து வீழ்த்தப்பட்டதாகவும் இஸ்ரேலியப் படையின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகரி தெரிவித்துள்ளார். 

ஈரானின் இந்த நடவடிக்கையை ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ், தாக்குதல் தொடர்புடைய அனைத்து தரப்புகளும் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த விவகாரத்தால், தன்னுடைய டெலாவர் கடற்கரை பங்களாவில் ஒரு வாரம் ஓய்வெடுக்கச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உடனடியாக அதை ரத்துசெய்துவிட்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். 

ஈரானின் ஏவுகணைகளில் கணிசமானவற்றை அந்த வட்டாரத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன் படைகள் வழிமறித்துத் தாக்கி வீழ்த்தியதாக அவ்விரு நாட்டுப் படைகளும் தெரிவித்துள்ளன. அமெரிக்கா இத்தாக்குதலால் ஆவேசம் அடைந்துள்ளது. 

இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டம் இன்று ஞாயிறு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஈராக் முதலான நாடுகள் தங்களின் வான் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளன.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com