அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், 35,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்னைக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளன.
இந்நிலையில், அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.
அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் இதுகுறித்து கூறியதாவது, ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்துக்கும், பாலஸ்தீனுக்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை தீர்க்க பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரா சான்செஸ் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில், மே 28 ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின் அங்கீகரிக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். அப்போது பேசி அவர், “அமைதி, நீதி, ஒற்றுமைக்காக நாம் செயலாற்ற வேண்டிய நேரத்திலிருக்கிறோம்” என்றார்.
மூன்று நாடுகளின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, அந்த நாடுகளில் உள்ள தங்களது வெளியுறவுத் தூதர்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.