தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தவரால் தொடங்கப்பட்ட மாவீரர் நாளான இன்று பிரபாகரனின் மகள் துவாரகா தோன்றிப்பேசுவதான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழத் தனி நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்துவிட்டார் என்றே அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் பிரபாகரனே உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் போன்றவர்களும் கூற, அதையடுத்து இன்று மாவீரர் நாளில் துவாரகா உரையாற்றுவார் என தகவல் வெளியானது. ஈழத் தமிழர் புழங்கும் சமூக ஊடகங்களில் இதுகுறித்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டன.
பிரபாகாரன் சகோதரர் குடும்பத்தினரும் அவரின் மனைவி மதிவதனியின் உறவினர்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் பகிரங்கமாக கருத்துமாறுபாடு வெடித்தது.
இந்த நிலையில், இன்று மாலையில் ஒருசாரார் கூறியிருந்தபடி, தமிழ் ஒளி என்ற இணையதளத்தில் துவாரகாவின் உரையென ஒளிபரப்பப்பட்டது.
சுமார் 11 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், புலிகளும் மக்களும் வேறு வேறு அல்லர் என்று துவாரகா குறிப்பிட்டார்.
இந்த காணொலியில் தோன்றி உரையாற்றியவர் உண்மையிலேயே பிரபாகரன் மகள்தானா என்பது பற்றி உறுதிபடச் சொல்வதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை.
டீப் ஃபேக் (Deepfake) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதாநாயகிகளின் போலி வீடியோக்களைப் போல இந்த ‘துவாரகா வீடியோ’வும் இருப்பதாகவே பல தரப்பினராலும் கணிக்கப்படுகிறது.
https://tamiloli.net/?fbclid=IwAR3zQVhBvoP_R4Yx8wscOQgM7KUUNEbIXOZhYOhfBQXOGgQR1lm_mUuhnPs#about