இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈரானில் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்தது. தங்கள் சொந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் அறிவித்தது.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்னர் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அரசு பகிங்கரமாக அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று இரவு இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகனைகளை வீசியது. 200-க்கும் அதிகமான ஏவுகணைகள் அடுத்தடுத்து இஸ்ரேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு இல்லை என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படையினர் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடனடியாக அமைதி திரும்ப நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.