'ஐயோ....அது வந்துவிட்டது' ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு!!

எல்நினோவால் கடுமையான வறட்சி ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கின்றன.
எல்நினோவால் கடுமையான வறட்சி ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கின்றன.
Published on

இதுவரை வந்ததிலேயே மிகவும் வலிமையான எல்நினோ வரப்போகிறது, அதனால் உலகநாடுகள் பல சிக்கல்களை எதிர்நோக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் எல்நினோ தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

பசிபிக் கடலின் மேற்பரப்பில் அதிகமான வெப்பநிலையின் காரணமாக, ஜப்பான் நாடு முழுவதும் உச்சபட்ச வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய கடல் - வளிமண்டல நிர்வாகம், ஜூன் மாதத்தில் எல்நினோ உருவாவதற்கு 82% வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது.

எல்நினோ என்பது மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலையை உருவாக்கும் ஒரு இயற்கையான காலநிலை மாற்றமாகும். இது உலகெங்கிலும் உள்ள மழைப்பொழிவு, வெப்பநிலைகளை மாற்றி, கடுமையான வறட்சி அல்லது தீவிர வெள்ளத்தை ஏற்படுத்தும்.

பூமத்திய ரேகையை ஒட்டி கிழக்கிலிருந்து மேற்காக வீசும் வர்த்தகக் காற்று பலவீனமடைவதுதான் எல்நினோ உருவாகக் காரணம் ஆகும். பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்நிகழ்வு, 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

எல் நினோ ஏற்படும் போது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியாவின் சில பகுதிகளில் வறட்சியும், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழையும், வெள்ளமும் ஏற்படும்.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகவும், வெப்பநிலை அதிகரிக்கவும் எல் நினோ காரணமாகிறது.இதனால் நாட்டின் விவசாய உற்பத்தி, பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

தற்போது, வளிமண்டலம் ஏற்கனவே எல்நினோவின் சில தெளிவான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்குள் கிழக்கு பசிபிக் பகுதியில் மூன்று புயல்கள் உருவாகியுள்ளன, இது அப்பகுதியில் தீவிரமான சூறாவளி ஏற்படுவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

இதனால், மத்திய அமெரிக்காவில் கனமழை, வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவிழந்த கிழக்கு திசை வர்த்தகக் காற்றுகள், இந்தோனேசியாவின் மீது குறைந்த மேகமூட்டம், மழைப்பொழிவு ஆகியவை எல்நினோவின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் பல பகுதிகளில் ஏற்படும் மாறுபட்ட வெப்பசலனம், மழைப்பொழிவு ஆகியவை எல்நினோவின் தீவிர அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது.

இந்த எல்நினோ பாதிப்பினால், கடுமையான வானிலை மாற்றங்கள், அதிகப்படியான வெப்பநிலை மாற்றம், பெரும் உணவு பற்றாக்குறை ஆகியவை ஏற்படக்கூடும் என்று வானியல் ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

எல்நினோ குறித்த துல்லியமான கணிப்புக்கு இன்னும் சில நாள்கள் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் எல்நினோ குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், மற்ற ஆய்வு மையங்களும் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com