பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் தன் 86ஆவது வயதில் காலமானார்.
மேற்கு இங்கிலாந்தின் சோமர்செட், வெலிங்டன் நகரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று அவர் வழக்கம்போல எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அமைதியான முறையில் அவரின் உயிர் பிரிந்தது என அவருடைய ஆஸ்தான வெளியீட்டு நிறுவனமான ஹேப்பர் காலின்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது ஆண்டுகளாகக் கதை எழுதிவந்த ஆர்ச்சரின் புத்தகங்கள் 30 கோடி அளவுக்கு விற்றுள்ளன என்கின்றன, அதிகாரபூர்வமான தகவல்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யாகவும் இருந்த இவர், கடந்த 2001ஆம் ஆண்டில் வழக்கு ஒன்றில் மோசடியாக வாக்குமூலம் அளித்ததாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
ஆனாலும், இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டவர், 2024ஆம் ஆண்டுவரை பிரபுக்கள் அவையில் உறுப்பினராக இருந்துவந்தார்.
ஆர்ச்சரின் கடைசி நாவலான ஆடம் அண்ட் ஈவ் செவ்வாயன்று வெளியானது.
வரும் சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த இதன் விமர்சனக் கூட்டத்தில் ஆர்ச்சர் கலந்துகொள்வதாக இருந்தநிலையில், அவர் இறந்துபோனார்.
இந்த ஆண்டில்தான் தன் மனைவி மேரியுடன் அறுபதாம் ஆண்டு திருமண விழாவை அவர் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஐந்து பேரக் குழந்தைகளும் உள்ளனர்.