சுதந்தரப் பறவையான ஜூலியன் அசாஞ்சே! அமெரிக்கா போட்ட டீல்!

ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே
Published on

ஜூலியன் அசாஞ்சே, பிரிட்டன் சிறையிலிருந்து நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று அமெரிக்க நீதிமன்றமும் தண்டனை எதுவுமின்றி அவரை விடுவித்துள்ளது.

ஜூலியன் அசாஞ்சே நண்பர்களுடன் இணைந்து கடந்த 2006-ஆம் ஆண்டில் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தைத் தொடங்கினார். அதில், அமெரிக்க ராணுவத்தினர் செய்துவரும் அத்துமீறல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.  

2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவா் வெளியிட்ட தூதரக  உரையாடல் பதிவுகள் உலக அளவில் அதிர்வலையை  ஏற்படுத்தின.

இது போன்ற ரகசிய ஆவணக் கசிவுகள் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஜூலியன்  அசாஞ்சே மீது குற்றஞ்சாட்டிய அமெரிக்க நீதித் துறையினர்,  உளவு பார்த்ததாக அவா் மீது 2010இல் குற்றவியல் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அசாஞ்சே மீது அதே ஆண்டில் ஸ்வீடனில் வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கின் கீழ், பிரிட்டன் வந்திருந்த அவரை ஸ்வீடனுக்கு  நாடுகடத்த வேண்டுமென்று வலியுறுத்தி ஐரோப்பிய அளவிலான கைது உத்தரவை ஸ்வீடன் அதிகாரிகள் பிறப்பித்தனர்.

அதைத் தொடா்ந்து அசாஞ்சாவை லண்டன் போலீஸாா் கைது  செய்து சிறையில் அடைத்தனர். எனினும், ஜாமீனில் 2012-ஆம் ஆண்டு வெளியே வந்த அசாஞ்சே, ஜாமின் நிபந்தனையை  மீறி ஈக்வடாா் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அவருக்கு ஈக்வடார் அடைக்கலம் கொடுத்தது. பின்னர் அதை 2019ஆம் ஆண்டு திரும்பப் பெற்றுக் கொண்டது.

அதனை தொடர்ந்து, ஜாமின் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவரை லண்டன் போலீஸாா் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, ஸ்வீடனில் அவர் மீது தொடரப்பட்டிருந்த பாலியல் குற்றவழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இந்தச் சூழலில், ஆஸ்திரேலியா முன்னிலையில் அமெரிக்காவுக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் அவரை சிறையிலிருந்து பிரிட்டன் அதிகாரிகள் விடுவித்ததாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகின.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவில் சுமத்தப்பட்டுள்ள உளவுக் குற்றச்சாட்டை ஜூலியன் அசாஞ்சே ஏற்றுக்கொள்வார். அதற்குப் பதிலாக, அந்தக் குற்றத்துக்கு 62 மாத சிறைத் தண்டனை மட்டுமே அரசுத் தரப்பு கோரும். அந்தத் தண்டனை விதிக்கப்பட்டால், ஜூலியன் அசாஞ்சே ஏற்கெனவே பிரிட்டனில் அனுபவித்த சிறைத் தண்டனையிலிருந்து அது கழிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுவார். பின்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பபடுவாா் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி, பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு ஜூலியன் அசாஞ்சே இன்று அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அவர் தண்டனை எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் சென்றடைந்தார். இனியாவது சுதந்தரக் காற்றை அவர் சுவாசிக்கட்டும்!

logo
Andhimazhai
www.andhimazhai.com