பிரிட்டன் பிரதமராகிறார் கீர் ஸ்டாமர்!... யாருப்பா இவரு?
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பழைமைவாதக் (கன்சர்வேட்டிவ்) கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி உட்பட்ட பல கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.
கருத்துக் கணிப்பு முடிவுகளிள், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி கடுமையான தோல்வியைச் சந்திக்கும் எனவும், தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே கீர் ஸ்டாமர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தமுள்ள 650 இடங்களில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. கீர் ஸ்டாமர் தனது சொந்தத் தொகுதியில் வெற்றிபெற்றார்.
பெரும்பான்மையைவிடக் கூடுதலான இடங்களில் தொழிலாளர் கட்சி வென்றநிலையில், அக்கட்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் ஆட்சியைப் பிடிக்கிறது. கீர் ஸ்டாமர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
கீர் ஸ்டாமர் பின்னணி
செப்டம்பர் 2, 1962ஆம் ஆண்டு பிறந்தவர் கீர் ஸ்டாமர். இவரது தந்தை பல்விதமான ரிப்பேர் வேலைகளைச் செய்யும் தொழிலாளி. தாய் செவிலியர். சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் இருந்ததால் வயலின் கற்றுக்கொண்ட ஸ்டாமர், லீட்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் சட்டம் பயின்றார். இவருடைய குடும்பத்தில் இவர்தான் முதல் பட்டதாரி.
வழக்கறிஞராக ஆன ஸ்டாமர், தொழிற்சங்க உரிமைகள், மெக்டோனல்டின் சட்டவிரோதத்துக்கு எதிராகக் களப்பணி, மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு சமூகப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டார்.
அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ள ஸ்டாமருக்கு, தற்போது 61 வயது. 2015ஆம் ஆண்டிலிருந்து எம்.பி.யாகவும் இருந்து வருகிறார்.
2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சித் தலைவர் தேர்தலில், முதல் சுற்றிலேயே ஸ்டார்மர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகவே இவர் கூறி வந்துள்ளார்.