
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் தலைமை மதகுரு கமேனி (86) உயிரிழந்து விட்டதாக ஈரானிய உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், ஈரானை அடுத்து வழிநடத்தக் கூடிய தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரனும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.
இந்த தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு மகளிா் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 85 மாணவிகள் உயிரிழந்தனா், 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கமேனின் 36 ஆண்டுகால ஆட்சி ஈரானை ஒரு சக்தி வாய்ந்த நாடாகவும், அதிலும் அமெரிக்க மீதான எதிர்ப்பையும் வலுப்படுத்தியது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அதன் ராணுவ செல்வாக்கு உயர்ந்தது. 86 வயதுள்ள கமேனி நேற்று கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானை அடுத்து ஆளப்போகும் தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது