இராமேசுவரத்தில் மீனவர்கள் தொழில்நிறுத்தம்
இராமேசுவரத்தில் மீனவர்கள் தொழில்நிறுத்தம்

சொந்த நாட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது... இது இலங்கை கதை!

ஒரே வாரத்தில் மூன்று முறை தமிழ்நாட்டு மீனவர்களைக் கைதுசெய்திருக்கிறது, இலங்கைக் கடற்படை. 

முதல் சம்பவம், கடந்த 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேரை இலங்கைப் படை கைதுசெய்து சிறையில் அடைத்தத்து.

அதையடுத்து, இராமேசுவரத்திலிருந்து கடந்த சனிக்கிழமை கடலுக்குள் சென்ற 507 படகுகளில் ஞாயிறு காலையில், யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவுக்கு அருகில் 3 படகுகள் போய்விட்டன. அந்தப் படகுகளில் இருந்த சுரேஷ்பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜு உட்பட 22 பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்தது. ஊர்காவல்துறை நீதிமன்றத்தின் ஆணைப்படி அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கம்போல, படகுகளை இலங்கை அரசு தன்வயப்படுத்திக்கொண்டது. தமிழகத்து மீனவர்களை விடுவிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். 

இந்நிலையில் இன்றும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் பத்து பேரை எல்லைமீறியதாக இலங்கைப் படை கைதுசெய்திருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடித்ததாக 204 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 27 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அந்நாட்டுக் கடற்படை நேற்று அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

இதனிடையே வெளியான இன்னொரு தகவல் வாயடைக்கச் செய்யக்கூடியதாக இருக்கிறது. கடந்த ஞாயிறன்று நெடுந்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் சகோதரர்கள். சுப்பிரமணியம் தீபன், சுப்பிரமணியம் சுதாகர் ஆகிய அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களே. போர் காரணமாக 1997ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்துக்கு வந்து, மண்டபம் அகதிகள் முகாமில் வசித்துவருகிறார்கள். மீன்பிடிப் படகில் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றிவரும் இவர்கள் சென்ற படகு, எல்லைமீறிவிட்டதாக சிக்கிக்கொண்டது. 

உயிர்காக்க நாட்டைவிட்டுப் போய், சொந்த நாட்டுக் கடல் எல்லையை மீறி வந்ததாகக் கைதாகியுள்ளவர்கள், அனேகமாக அண்மைக் காலத்தில் இவர்களாகத்தான் இருக்கமுடியும்.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாலும், மற்ற 20 பேருக்குமான நடவடிக்கையே இவர்கள் மீதும் எடுக்கப்படுமா அல்லது இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com