
வேலைக்கான நேர்காணலுக்குச் சென்ற பெண்களிடம் கஷ்டமான கேள்விகளைக் கேட்டு, பதிலை வாங்குவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். சீனாவிலோ விண்ணப்பதாரர்களிடம் கர்ப்ப சோதனை நடத்தியிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அங்குள்ள சியாங்க்சு மாநிலத்தில்தான் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது எனக் கொதிக்கிறார்கள், பெண் உரிமை அமைப்பினர்.
சியாங்க்சு மாநிலத்தில் டோங்சோ மாவட்டத்தில் உள்ள நாண்டாங் நகரில் 168 பேரிடம் இப்படி கர்ப்ப சோதனையை நடத்தியிருக்கின்றன, தொழில் நிறுவனங்கள். சோதனையில் கர்ப்பம் உறுதியானால் அவர்களுக்கு வேலை மறுக்கப்படுவது நடந்துவருகிறது.
இப்படி, வேலைகேட்டுச் சென்ற பெண்களிடம் கர்ப்ப சோதனை நடத்திய 16 நிறுவனங்கள் சீன சட்டத்துறையிடம் சிக்கியுள்ளன.
பொதுநல சட்ட உரிமை அமைப்பு ஒன்று அளித்த புகாரில் இந்த விவகாரம் பற்றி அரசு விசாரணையில் இறங்கியுள்ளது.
இரண்டு மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகம் ஆகியவற்றின் மீது சட்டத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
ஆவணங்களைச் சோதித்ததில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் அடைந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு வேலை மறுக்கப்பட்டது உறுதியானது.
ஆனாலும் அரசின் தலையீட்டுக்குப் பிறகு அந்தப் பெண்ணை பிறகு அந்நிறுவனம் வேலைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அவருக்கான இழப்பீட்டையும் அதன்சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி நடந்துகொண்டதற்காக அரசுத் தரப்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டது என்று தென் சீன காலை போஸ்ட் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்களில் இப்படியாக பாலினப் பாகுபாடு கண்டறியப்பட்டால், அதிகபட்சம் 50 ஆயிரம் யுவான் அதாவது 6,900 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
ஏற்கெனவே, சீனத்தில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைந்துகொண்டே போவதால், அரசாங்கம் குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு நேர்மாறாக தொழில் நிறுவனங்களின் இந்தச் செய்கை அமைந்திருப்பதாக அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் தேசிய குழந்தைப் பிறப்பு ஆயிரம் பேருக்கு 6.77 என இருந்தது, சென்ற ஆண்டில் ஆயிரத்துக்கு 6.39 எனக் குறைந்துவிட்டது.
முன்னதாக, 2020ஆம் ஆண்டில் 807 ஆக இருந்த பிரசவ மருத்துவமனைகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டில் 793ஆகக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.