ஒரே நாளில் 60,000 பேர்... ஸ்பெயினில் தஞ்சம்புகுந்த அகதிகளில் 57 பேர் சாவு!

Migrants moving to spain
ஸ்பெயினில் தஞ்சம் புகும் அகதிகள்
Published on

ஸ்பெயின் நாட்டுக்குள் ஒரே நாளில் 60,000 பேர் தஞ்சமடையச் சென்றதால் பெரும் பதற்றநிலை உண்டானது.

எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல், கடலில் மூழ்குதல், நெரிசல் உட்பட்ட காரணங்களால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 57 பேரின் உடல்கள் எல்லையோரங்களில் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயினுக்குள் நுழைவதற்காக திரண்டவர்கள் மீது மொராக்கோ பாதுகாப்புப் படையினர், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும் அவர்களைக் கலைக்க முயன்றனர்.

"இந்த எல்லைமீறல்கள், ஸ்பெயினின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்" என்று ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற நுழைபவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்பாமல், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஸ்பெயின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அண்மையில் வழங்கியது.

மொராக்கோ நாட்டின் வழியாக அதன் எல்லைப்பகுதி கடல்மூலம் ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான தியூட்டா வழியாக நுழைபவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்று மனிதக் கடத்தல் கும்பல்கள் வதந்தியைப் பரப்பினர். இதனால், ஸ்பெயினுக்கு நெருக்கடி உருவாகியுள்ளதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், மொராக்கோவின் முழு ஒத்துழைப்புடன் சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எல்லையைக் கடந்த பலர், தாங்களாகவே மொராக்கோவிற்குத் திரும்பிவருவதால், அகதிகள் படையெடுப்பு கட்டுக்குள் வந்துவிட்டதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.      

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com