இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் 15ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட இனப்படுகொலைப் போரில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கையின் இறுதிப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதி முழுவதும் கடந்த 13ஆம் தேதி தொடங்கி முள்ளிவாய்க்கால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் கஞ்சிகூட கிடைக்காமல் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும்படியாக- இந்த நிகழ்வின் அடையாளமாக கஞ்சி காய்ச்சி வழங்குதல் நடத்தப்பட்டது. பல ஊர்களில் இலங்கை இராணுவத்தினர் இதற்குத் தடைவிதித்து பிரச்னையும் செய்தனர். அதையும் மீறி ஈழத்தமிழர்கள் கஞ்சி காய்ச்சி வழங்கலை நிகழ்த்தினார்கள்.
இறுதிப்போரின் கடைசி நாளான மே 18ஆம் தேதியை நினைவுகூரும்படியாக, முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் நினைவுச்சின்னம் முன்பாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் இன்று அதிகாலை முதலே அங்குள்ள கடற்கரையில் திரளத் தொடங்கினர்.
பின்னர், குடிமக்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பல சமயத்தவரும் கலந்துகொண்டு போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.