அமெரிக்காவில் ட்ரம்ப் அரசில் பதவி வகித்து வந்த தொழிலதிபர் எலான் மஸ்க் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்ததும் அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘DOGE’என்னும் புதிய துறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கினார். ட்ரம்ப் ஆதரவாளரும் டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் இதற்கு தலைமைப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில்தான் பதவி விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தலைமையிலான ‘டாட்ஜ்’ துறை தீவிரமாக செயல்பட்டு அரசு ஊழியர்களை பணியை விட்டுநீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இதையடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அந்த காலக்கெடு மே 30 அன்று முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“ அரசின் சிறப்பு ஊழியர் ஆக எனது திட்டமிட்ட காலம் முடிவடைகிறது, அரசுக்கான வீண் செலவுகளை குறைப்பதற்காக வாய்ப்பு கொடுத்ததற்கு ட்ரம்ப் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.டாட்ஜ் திட்டம் காலப்போக்கில் மேலும் வலுப்பெறும், ஏனெனில் அது அரசின் முழுவதுமான முழுவாழ்க்கை முறையாக மாறும்”. என எலான் மஸ்க் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் கொண்டுவர இருக்கும் வரிவிதிப்பு, குடியேற்றம் தொடர்பான சட்டங்களை எலான் மஸ்க் நேற்று விமர்சனம் செய்த நிலையில் பதவி விலகலை அறிவித்திருப்பது கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.