நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்கள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசுக்கு எதிராக இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் போராட்டத்தில் குதித்தனர்.
நேற்று, பல்வேறு இடங்களில் இருந்து தலைநகர் காட்மாண்டை நோக்கி பேரணியாக சென்றனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கே வைக்கப்பட்டிருந்த தடைகளை அகற்றிக்கொண்டு உள்ளே செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துடன் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். நிலைமை கைமீறி போகவே வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நேபாள அரசு இதுவரை வெளியிடவில்லை.
போராட்டம் நாடு முழுவதும் பரவிய சூழலில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு விலக்கி கொண்டது. ஆனாலும் கோபம் தணியாத இளைஞர்கள் மீண்டும் இன்றும் போராட்டம், வன்முறையில் களம் இறங்கி உள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் நேபாளம் நாடெங்கும் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர்வளத்துறை அமைச்சர் யாதவ் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர்.
நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் ராம் சந்திரி பவுடெல் இல்லத்தை சூறையாடி இருக்கின்றனர். ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தாஹல், ஷேர் பகதூர் டியுபா, எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோர் இல்லங்களும் போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. அமைச்சர்கள் பலரும், ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படுகின்றனர். நாட்டின் பல பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
நிலைமையை சமாளிக்க முடியாமல் இருக்கும் பிரதமர் சர்மா ஒலி, நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன. உடல் நலம் குன்றி இருக்கும் அவர் சிகிச்சைக்காக துபாய் செல்ல இருப்பதாகவும், அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.