நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் இணையம் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளைக் கண்காணிக்கவும் அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களைப் பதிவு செய்ய அந்நாட்டு அரசு ஏழு நாள் அவகாசம் வழங்கியிருந்தது. அவகாசம் முடிவடைந்தும், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், யு டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து இவற்றை முடக்கி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டுத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை முடக்கப்பட்டுள்ளன.
இந்த தடை உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக Gen Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் குதித்ததனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த தெருக்களில் ஒன்று கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் புகுந்தனர். இதனால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.