ஜல்லிக்கட்டு போல நடக்கும் காளைச் சண்டை... 2027 முதல் தடா!

ஸ்பெயினில் நடைபெற்ற காளைச்சண்டை
ஸ்பெயினில் நடைபெற்ற காளைச்சண்டை
Published on

தமிழ்நாட்டின் மரபு விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படும் சல்லிக்கட்டைப் போல அமெரிக்க கண்ட நாடுகளில் காளைச் சண்டை பழைமையானது. ஆனாலும் நம் ஊர்களில் நடப்பதைப் போலவே காளைச் சண்டையையொட்டி பல பத்து பேர் உயிரிழப்பது தொடர்ந்துவருகிறது. மேலும், விலங்குகளைத் துன்புறுத்தும் இந்த நிகழ்வைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரமும் இன்னொரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

இந்த சூழலில், கொலம்பியாவில் காளைச் சண்டையை நிறுத்துவது என்றும் அது சட்டவிரோதம் என்றும் அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கையெழுத்திட்டுள்ளார். 

தலைநகர் பொகோட்டாவில் காளைச் சண்டை நடைபெறும் மைதானத்தில் குழுமியிருந்த ஏராளமான விலங்குநல ஆர்வலர்கள் மத்தியில் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 

பண்பாடு, ஏன் சட்டத்தின் பெயராலும் மனிதர்களின் மகிழ்ச்சிக்காக உயிருணர்வுள்ள உயிரினங்களைக் கொல்வது எப்படி பண்பாடாக இருக்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். 

பாரம்பரியம் எனும் பெயரால் கொலம்பியாவில் நெடுங்காலமாக நடந்துவரும் காளைச்சண்டைக்கு, புதிய சட்டத்தின் மூலம் முடிவுகாணப்பட்டுள்ளது. இது வரும் 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் அதிக ஆதரவுடன் கொண்டுவரப்பட்டாலும் அதிபரின் அறிவிப்பு மூலம் முறைப்படி நடைமுறைக்கு வரவுள்ளது.

ஏற்கெனவே, காளைச்சண்டை நடைபெற்றுவரும் இடங்களை என்ன செய்வது எனும் கேள்வி எழாமல் இல்லை. அந்த இடங்களை பண்பாட்டு மையங்களாகவோ விளையாட்டுத் திடல்களாகவோ மாற்றியமைக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் அர்ஜெண்டினா, பிரேசில், சிலி, குவாட்டமாலா, உருகுவே ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, காளைச்சண்டைக்குத் தடைவிதித்த நாடுகள் பட்டியலில் கொலம்பியாவும் இணைந்துள்ளது.

ஆனால், ஈக்குவடார், மெக்சிகோ, பெரு, வெனிசுலா, ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இன்னும் காளைச்சண்டை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com