2.7 இலட்சம் மாணவர்களுக்குதான் அனுமதி- ஆஸ்திரேலிய முடிவின் பின்னணி!
வரும் கல்வியாண்டில் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் பன்னாட்டு மாணவர்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும் என ஆஸ்திரேலிய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பன்னாட்டு மாணவர்களின் கட்டணம் மூலமாக அந்த நாடுகள் பெரும் வருவானத்தை ஈட்டிவருகின்றன. சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவந்த பன்னாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆறு இலட்சமாக ஆனது. ஆனால், பன்னாட்டு மாணவர்களின் அதிகரிப்பால் குடியேற்றப் பிரச்னை உருவாகிறது என அந்நாட்டின் வலதுசாரி கட்சிகள், அமைப்புகள் அண்மைக் காலமாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. பல இடங்களில் வெளிநாடுகளிலிருந்து குடியேறிய ஆஸ்திரேலியர்களை உள்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தாக்குவதுகூட நிகழ்கிறது. வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்பது ஒரு வாதம்.
கடந்த ஆண்டில் பன்னாட்டு மாணவர் மூலமாக 4,800 கோடி ஆஸ். டாலர் அந்நாட்டுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 15 சதவீதமும் தொழிற்கல்லூரிகளில் 20 சதவீதமும் மட்டுமே கூடுதலாக பன்னாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்; மொத்தம் 2,70,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சர் ஜேசன் கிளேர் நேற்று சிட்னியில் அறிவித்தார்.
“இது நம்முடைய பொருளாதாரத்தின் முக்கிய அங்கம் என்பதில் சந்தேகம் இல்லை. அது மாற்றப்படாது. பன்னாட்டுக் கல்வியை பாதிக்கிறது என்பது தவறு. நம் வருங்காலத்துக்கு நீடித்த ஒரு வழிமுறையை உருவாக்கவேண்டும் என்பது தொடர்பானது இது. ” என்றும் அவர் கூறினார்.
ஆனால், பல்கலைக்கழகங்களின் தரப்பில் அரசின் இந்தக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வித் துறை போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கல்வித் துறையை விலைகொடுத்து குடியேற்றக் கட்டுப்பாடுகளை விதிக்கமுடியாது என்கிறார், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் தலைவர் டேவிட் லாய்டு.
முன்னதாக, கனடா, நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் குடியேற்றப் பிரச்னை காரணமாக, பன்னாட்டு மாணவர்களுக்கான அனுமதியைக் குறைத்தன. அதைத் தொடர்ந்து மாதக் கணக்கில் ஆஸ்திரேலிய அரசு இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது.