ரேபீஸ் நோய் வந்து பிழைத்தவர்! மருத்துவ உலகில் ஓர் ஆச்சர்யம்!
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ரேபீஸ் எனப்படும் விலங்குகளால் பரப்பப்படும் வெறிநோய் வந்தால் சாவு மட்டும்தான் தீர்வு பிழைக்கவே முடியாது என்பார்கள் மருத்துவர்கள். உண்மைதான் ரேபீஸ் என உறுதியாகிவிட்டால் பிழைத்தவர்களே கிடையாது. அதிகமாகப் போனால் 5 நாட்களில் இறந்துவிடுவர். சிகிச்சையே இல்லை. சமீபத்தில் கூட வட இந்தியாவில் வெறிநாயால் கடிபட்ட சிறுவன் ஒருவன் உயிர்விட்ட காட்சி அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது. வைரஸ் நோயான இதற்கு ஒரே வழி தடுப்புசிகள்தான். வெறிநோய் பரப்பும் விலங்குகளால் கடிபட்டவர்களும் உடனே தடுப்பூசி சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும். எதில் மெத்தனமாக இருந்தாலும் விலங்குகளின் கடியில் மட்டும் மெத்தனமாக இருக்கவே கூடாது.
ரேபீஸ் நோய் வந்து பிழைத்தவர்கள் இருக்கிறார்களா? உலகில் இப்படிப் பிழைத்ததாக ஒன்றிரண்டு பேரை மட்டுமே சொல்ல முடியும். அப்படி பிழைத்த ஒருவரின் அனுபவத்தை கார்டியன் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஜீனா ஜீஸ் என்கிற பெண் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தன் பெற்றோருடன் சிறுவயதில் தேவாலயம் சென்றுள்ளார். அங்கே வௌவால் ஒன்று பறந்துகொண்டு இருந்தது. அதை யாரோ அடித்து வீழ்த்த, விலங்குகள் பால் அன்பு கொண்ட இச்சிறுமி, அதைத் தூக்கிகொண்டுபோய் வெளியே இருந்த மரத்தில் விட்டுள்ளார். அப்போது நறுக்கென்று அந்த வௌவால் இவர் கையைக் கடித்துவிட்டது. வீட்டுக்கு வந்ததும் கிருமிநாசினி கொண்டு அவரது அம்மா காயத்தை சுத்தம் செய்துள்ளார்.
ஆனால் சில நாட்களில் இவரால் படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் நலம் கெட்டுவிட, பெற்றோர் பதறிப்போய் மருத்துவரிடம் காட்டி உள்ளனர். ஆனால் சரியாக வில்லை. நரம்பு சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் வௌவால் கடி பற்றி, இவரது அம்மா மருத்துவரிடம் சொல்ல, அம்மருத்துவர் பதறிப்போயிருக்கிறார். உடனே ரேபீஸ் வைரஸுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. மறுநாளே சோதனை முடிவில் ரேபீஸ் தான் என உறுதியாகிவிட்டது.
‘இனி பிழைக்கவே முடியாது. ஒன்று இங்கே மருத்துவமனையில் விட்டுச் செல்லுங்கள்.. அல்லது வீட்டுக்குக் கொண்டு போங்கள்!’ என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். பெற்றோரால் தாங்க முடியவில்லை. எதாவது செய்யுங்கள் என்று கெஞ்சவே... சரி இதுவரை யாரும் முயற்சித்துப் பார்க்காத வழி ஒன்று உள்ளது அதைச் செய்துபார்ப்போம் என மருத்துவர் சொன்னார்.
ரேபீஸ் ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நோய். இந்த வைரஸ் கடித்த இடத்தில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக மூளைக்குப் பரவி, உடல் செயல்பாடுகளைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்தும். நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்து இந்த வைரஸை அழிக்க நேரமே இருக்காது.
மருத்துவர்கள் இந்த பெண்ணை கோமா நிலைக்கு கொண்டு சென்றனர். அப்போது மூளை நரம்பு மண்டலச் செயல்பாடு குறைந்துவிடும், அச்சமயம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு இந்த வைரஸை எதிர்த்துப் போராட நேரம் கிடைக்கும் என்கிற கொள்கைப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கோமாவில் ஆழ்த்தப்பட்ட பெண் சில வாரங்களுக்குப் பின்னர் விழித்தெழுந்தார். அவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. 11 வாரங்கள் மருத்துவமனையிலும் 2 ஆண்டுகள் வெளி சிகிச்சை நோயாளியாகவும் இருந்து பிழைத்துக்கொண்டார் அவர். அவருக்கு பேச்சு மறந்துபோயிருந்தது. நடப்பது, ஓடுவது எல்லாமே மறந்துபோயிருந்தது. எல்லாவற்றையும் திரும்பவும் அவர் உடல் கற்க வேண்டி இருந்தது.
தடுப்பூசி இல்லாமல் ரேபீஸில் இருந்து உயிர் பிழைத்த ஒரே நோயாளி என்ற நிலையை இவர் அடைந்தார். அதன் பின்னர் வேறு சிலருக்கும் இந்த முறை பின்பற்றப்பட்டு அவர்களும் உயிர் பிழைத்துள்ளனர். டாக்டர்களும் என் குடும்பத்தினரும் அளித்த ஆதரவால்தான் நான் பிழைத்து உயிர்வாழ்கிறேன் என்று அனுபவம் பகிர்கிறார் ஜீனா ஜீஸ். இப்போது ரேபீஸ் நோய் பற்றி விழிப்புணர்வு அளித்துவரும் இப்பெண், விலங்குகள் மேல் கொண்ட அன்பு கொஞ்சமும் குறையாமல் அவற்றுக்குப் பணி செய்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடந்தது 2004 ஆம் ஆண்டு/ அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட முறைக்குப் பெயர் மில்வாகீ வழிமுறை (milwaukee protocol) என்பதாகும். ஆனாலும் இவ்வழிமுறை மருத்துவ உலகால் பெரிதும் பின் பற்றப்படுவது இல்லை. இதில் வெற்றிகரமான முடிவுகள் கிடைக்கவில்லை என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.
நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசி சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மெத்தனமாக இருக்கக்கூடாது. இந்தியாவில் ஆண்டுதோறும் வெறி நோய்க்கடிக்கு 18000-20000 பேர் உயிரிழப்பதாஜ உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.