ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றார் ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 265 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 75 இடங்கள் கிடைத்தன. பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களில் வெற்றி பெற்றது.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ’பிபிபி’ மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ’பிஎம்எல்-என் கட்சி’ புதிய அரசை அமைக்கவுள்ளது. இரு கட்சிகளின் பொது வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து பிடிஐ கட்சி சார்பில் உமா் அயூப் கான் போட்டியிட்டார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமரை தோ்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 336 உறுப்பினர்களில் ஷெபாஸ் ஷெரீப்க்கு ஆதரவாக 201 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒமா் அயூப் கானுக்கு ஆதரவாக 92 வாக்குகள் கிடைத்தன.

பெரும்பான்மைக்குத் தேவைப்படும் வாக்குகளைவிட ஷெபாஸ் ஷெரீப் 32 வாக்குகள் அதிகமாகப் பெற்றதையடுத்து, அவரை நாட்டின் 24-ஆவது பிரதமராக அவைத் தலைவர் சர்தார் அயஸ் சாதிக் அறிவித்தார்.

ஷெபாஸ் ஷெரீப் பிரமராகப் பதவியேற்ற நிகழ்ச்சி அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்றது. 72 வயதாகும் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை பிரதமராகப் பதவி வகித்தார். இப்போது இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com