அமெரிக்காவைவிட சீனா பக்கம் சாயும் உலகப் பார்வை!

Trump and xi - Jinping
டிரம்ப் - ஷி ஜின்பிங்
Published on: 

உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவை விட சீனா மீதான நம்பிக்கையும் ஆதரவும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி 8 முதல் மே 13 வரை, 36 நாடுகளில் வசிப்பவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.  

கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக, 36 நாடுகளில் 25 நாடுகள் அமெரிக்காவைவிட சீனாவைச் சாதகமாகப் பார்க்கின்றன என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவுடன் நீண்ட காலமாக நட்புறவில் உள்ள கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட்ட நாடுகளிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமையில் அதிக நம்பிக்கை இருப்பதாக 22 நாடுகளைச் சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றத்திற்கு, அமெரிக்காவின் கொள்கை, ஈரான் உட்பட்ட நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள், கூட்டணி நாடுகளுடன் ஏற்பட்ட வர்த்தக மோதல்கள், சுங்கவரிக் கொள்கைகள் ஆகியவை முக்கிய காரணங்களாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சீனா வர்த்தகம், முதலீடு, சர்வதேச ஒத்துழைப்பில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதால், உலக நாடுகளிடையே சீனா மீதான நம்பிக்கை உயர்ந்துள்ளது.

இருப்பினும், தனிநபர் சுதந்திரம், ஜனநாயக மதிப்புகள் போன்ற அம்சங்களில் அமெரிக்கா இன்னும் முன்னிலை வகிக்கிறது என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்திய மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சீனாவைவிட அமெரிக்கா மீது நம்பிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, உலக அரசியல், பொருளாதாரத்தில் சீனாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்துவருவதைக் குறிப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com