பீட்டர் ஹிக்ஸ்
பீட்டர் ஹிக்ஸ்

பீட்டர் ஹிக்ஸ் (1929- 2024): கடவுள் துகளைக் கண்டறிந்த நாத்திகர்!

1964-இல் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 35 வயதான இயற்பியல் உதவிப்பேராசிரியர் அவர். அணுவிலும் நுண்ணிய எலெக்ட்ரான் ப்ரோட்டான் போன்ற துகள்களையும்விட மிக நுண்ணிய புதிய துகள் ஒன்று இருக்கலாம். அத்துகள் பிற துகள்களின் செயல்பாடுகளை விளக்கக்கூடும்; அவை எப்படி நிறை பெறுகின்றன என்பதை அவை விளக்கும் என்று அறிவித்தார். போசான்கள் எனப்படும் நுண்ணிய துகள்கள் அவை.

இந்த போசான்களின் இருப்பு 2012-இல் ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வகத்தில் நடந்த சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு இதே பேராசிரியர் சென்றிருந்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வந்த அந்த துகள் தன் வாழ்நாளில் கண்டறியப்பட்டதைக் கண்டு அவர் கண்ணீர் உகுத்தார். அவர் பெயர் பீட்டர் ஹிக்ஸ்.

அந்த துகளுக்கு ஏற்கெனவே ஹிக்ஸ் போசான் என இவருடைய பெயரையே வைத்து அறிவியல் உலகம் அழைத்து வந்தது. கண்டு பிடிக்கவே முடியாது என்ற நிலையிலும் அடிப்படையான துகளாகவும் இருந்ததால் அதை கடவுள் துகள் என்றும் அழைத்தனர். தன் பெயரில் அழைப்பது பற்றி பீட்டர் ஹிக்ஸ் சற்று கிலேசம் அடைந்தார். கடவுள் துகள் என அழைக்கப்படுவதில் அவருக்கு விருப்பமே இல்லை. ஏனெனில் வாழ்நாள் முழுக்க நாத்திகராகவே வாழ்ந்தவர் அவர்.

பீட்டர் ஹிக்ஸுக்கு 2013க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இங்கிலாந்தில் பிறந்த பீட்டர் ஹிக்ஸ் படிப்பு முடித்து 1960இல் எடின் பர்க் பல்கலையில் பணிக்குச் சேர்ந்தார்.

கடந்த திங்கள் அன்று தன்னுடைய 94 ஆம் வயதில் அவர் மரணம் அடைந்ததாக எடின்பெர்க் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com