
இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கடந்த புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, வெள்ளியன்று அவரின் உடல் இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரின் வழக்குரைஞர் புகழேந்தி விமானத்தில் உடன்சென்றார்.
கொழும்பு கட்டுநாயக்கா பன்னாட்டு விமானநிலையத்தில் வைக்கப்பட்ட சாந்தனின் உடலை, அந்த நாட்டு சட்டத்துறை உத்தரவுப்படி நீர்கொழும்பு மருத்துவமனையில் மீண்டும் உடற்கூராய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட சாந்தனின் உடல் ஈழத்தமிழர் பகுதியை அடைந்ததும், முதலில் வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் வைக்கப்பட்டு, ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கிளிநொச்சியில் வைக்கப்பட்ட சாந்தனின் உடலுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்பட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, கொடிகாமம், நெல்லியடி ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், வல்வெட்டித்துறை தீருவில்லில் பொது அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்பட்டது.
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நேற்று மாலை சாந்தனின் உடல் அவரின் சகோதரி வீடு உள்ள உடுப்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது, ஆரத்தி எடுக்கப்பட்டது. அங்கு இந்து சமயப் பெரியவர்கள், தேவாரமும் கந்தசஷ்டி கவசமும் பாடினர். கிறித்துவப் பாதிரியார்களும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். குடும்பரீதியான சமயச் சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.
இன்று முற்பகல் மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட சாந்தனின் உடல், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டின் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டு, இறுதியாக எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது.