’ரஷிய வேவு’ திமிங்கலத்தைப் போட்டுத் தள்ளியது யார்?
சந்தேகத்துக்கு உரிய வகையில் உலாவிக்கொண்டிருந்த பெலுகா இனத் திமிங்கலம் நார்வேயின் வட கடல் பகுதியில் இறந்துகிடந்தது. இது ரசியாவின் உளவுத் திமிங்கலம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
தெற்கு நார்வேயின் ரிசவிகா குடா பகுதியில் இந்தத் திமிங்கலம் மிதந்தபடி இருந்ததை, முதலில் கடந்த சனிக்கிழமை அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த அப்பாவும் பிள்ளையும் பார்த்துள்ளனர். அதைத் தொடர்ந்து திமிங்கலப் பாதுகாப்புக்கான அரசுசாரா அமைப்பினர் அந்த இடத்துக்குச் சென்று அதன் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நார்வே கடற்பகுதியில் காணப்படத் தொடங்கிய இந்தத் திமிங்கலத்துக்கு, ஹவால்டிமிர் எனப் பட்டப் பெயர் வைக்கப்பட்டது. ஹவால்டு என்றால் நார்வே மொழியில் திமிங்கலம் எனப் பொருள். அத்துடன் அது ரசியாவால் பயிற்சி அளிக்கப்பட்ட உளவுத் திமிங்கலம் எனக் காரணம்கூறி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் பெயரையும் சேர்த்து இப்படி அழைக்கப்பட்டது.
“ ஹவால்டிமிர் சாதாரணமான ஒரு பெலுகா திமிங்கலம் அல்ல; அது நம்பிக்கை வெளிச்சம்; இணைப்பின் ஓர் அடையாளம்; மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை நினைவூட்டக்கூடியது.” என்று பலவாறாகப் பாராட்டுகிறது, மரைன் மைண்டு எனும் தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹவால்டிமிர் திமிங்கலத்தை சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள செபாஸ்டியன் ஸ்ட்ராண்டு திமிங்கலத்தின் இறப்பால் மிகவும் கவலை அடைந்துள்ளார். இவர் மட்டுமே மூன்று ஆண்டுகளாக இந்தத் திமிங்கலத்தைத் தொடர்ச்சியாக கவனித்துவந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் வடதுருவமான ஆர்க்டிக் பகுதியில் கண்டறியப்பட்ட இத்திமிங்கலத்தின் நீளம் 4.2 மீட்டர். எடை 1,225 கி.கி. அதன் கழுத்தில் ஏதோ ஒரு பொருளுடன் பொருத்தப்பட்டிருக்கக்கூடிய வகையில் ஒரு வளைந்த வார் கட்டப்பட்டு, அதில் (ரசியாவின்) செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கருவி எனப் பொருள் படும்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதை வைத்து, ரசியக் கடற்படையால் பயிற்சி அளிக்கப்பட்டு உளவு பார்ப்பதற்காக இறக்கிவிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது. அப்படித்தான் அதற்குப் பட்டப் பெயரும் சூட்டப்பட்டது.
இந்தப் பின்னணியில், சம்பவத்துக்கு முந்தைய நாள்வரை அது நல்லபடியாக இருந்துள்ளது என அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார், கடல் உயிரியலாளரான செபாஸ்டியன் ஸ்ட்ராண்டு.
உக்ரைன் - ரசியா மோதலில் மேற்குல நாடுகள் ஒன்றுபட்டுள்ள நிலையில், இத்திமிங்கலம் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் யார் இதில் ஈடுபட்டிருக்கக் கூடும்; வேறு நாடுகளின் ஈடுபாடு எதுவும் உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
ஆனால், ரசியத் தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.