சவால் விடுக்கும் ஏஐ - சத்யா நாதெல்லாவின் 6 கோரிக்கைகள்!

AI
ஏஐ
Published on: 

செயற்கை நுண்ணறிவுத் தளங்களை மக்கள் கண்மூடித்தனமாக நம்பினால், அது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ளது என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

சாட் ஜி.பி.டி., ஜெமினி, கிளாட், மெட்டா ஏஐ உட்பட்ட ஏஐ கருவிகளை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான ஓபன் ஏஐ, கூகுள், ஆந்த்ரோபிக், மெட்டா ஆகியவை உருவாக்கியுள்ளன. இவை வெறும் உரையாடிச் செயலி(சாட்பாட்)களாக மட்டும் இல்லாமல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஏஜெண்டுகளாக தற்போது மாறிவருகின்றன. எனவே, இவற்றை மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்றும், இதனால் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.

மேலும், தற்போது பயனில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஏஐ மாதிரிகள், பாரம்பரிய மென்பொருளைப் போல் இல்லாமல் புரியாத கருப்புப் பெட்டிகளை போல விளங்குவதால் முக்கியமான தரவுகளையும், தன்னிச்சையான அதிகாரங்களையும் அவற்றுக்கு வழங்குவது பாதுகாப்பு மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏஐ பாதுகாப்பு குறித்து சத்யா நாதெல்லா தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள 6 வழிகாட்டுதல்கள்:

”1) ஒரு பணியை ஏஐ செய்துக்கொண்டிருக்கும் போது, ஏதேனும் தவறு நடந்தால், அவற்றை உடனடியாக நிறுத்தவோ, முழுமையாக முடக்கவோ மனித மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

2) ஏஐ மாடல்களின் திறன்களும், அனுமதிகளும் தனித்தனியாக இருக்க வேண்டும்.

3) ஏஐ என்ன செய்தது என்பதை மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தமுடியாத கண்காணிப்புப் பதிவுகளின் உருவாக்கம் வேண்டும்.

4) நிறுவனங்கள் ஒரே ஒரு ஏஐ மாடலை மட்டும் நம்பியிருக்காமல் ஒரு மாடலின் துல்லியத்தைச் சரிபார்க்க மற்றொரு ஏஐ மாடலைப் பயன்படுத்த வேண்டும்.

5) ஒரு சிறிய நெட்வொர்க் கோளாறு ஒட்டுமொத்த நிறுவனத்தின் நெட்வொர்க்கையும் பாதிக்காத வகையில், கடுமையான பாதுகாப்பு எல்லைகள் ஏற்படுத்த வேண்டும்.

6) ஹேக்கர்களிடம் இருந்து நிறுவனங்கள் தங்கள் ஏஐ பாதுகாப்பு அமைப்புகளைப் பாதுகாக்க தொடர்ந்து ஏஐ செயல்பாடுகளைச் சோதனைக்கு உட்படுத்தி, அதன் பலவீனங்களை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.” என்று சத்யா கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com